உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளையான்குடியில் குடிநீர் திட்ட பிரச்னை கலெக்டரை சந்திக்க கவுன்சிலர்கள் முடிவு

இளையான்குடியில் குடிநீர் திட்ட பிரச்னை கலெக்டரை சந்திக்க கவுன்சிலர்கள் முடிவு

இளையான்குடி : இளையான்குடியில் புதிய குடிநீர் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை சரி செய்து நிறைவேற்ற கோரி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் மாவட்ட கலெக்டரை சந்திக்க பேரூராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இளையான்குடி பேரூராட்சி கூட்டம் தலைவர் நஜூமுதீன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் இப்ராகிம் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் அன்னலட்சுமி வரவேற்றார். கூட்டத்தில் இளையான்குடி பேரூராட்சியில் ரூ. 28 கோடி செலவில் மத்திய அரசின் அம்ரூத் 2.O திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் திட்டத்திற்காக கச்சாத்தநல்லுார் அருகே வைகை ஆற்றில் உறை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் கச்சாத்தநல்லூர் கிராம மக்கள் உறை கிணறு அமைத்தால் தங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் எனக் கூறி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய குடிநீர் திட்ட பணியில் பாதிப்பு ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளை பேரூராட்சி தலைவர் நஜூமுதீன் தலைவர் தலைமையில் செயல் அலுவலர் அன்னலட்சுமி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் நடந்த விவாதம்: செய்யது ஜமீமா, தி.மு.க., கவுன்சிலர்: மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதால் கொசு மருந்து அடிக்க வேண்டும். ராஜவேலு, (சுயே) கவுன்சிலர்: கீழாயூர் அருகே உரக்கிடங்கு அமைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அன்னலட்சுமி, செயல் அலுவலர்: கவுன்சிலர்களின் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ