கோவானுார் முருகன் கோயிலில் நெரிசல்: பக்தர்கள் மயக்கம்
சிவகங்கை : சிவகங்கை அருகே கோவானுார் முருகன் கோயிலில் தை பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் முருகனை வழிபட குவிந்ததால் நெரிசலில் சில பக்தர்கள் மயக்கம் அடைந்தனர்.சிவகங்கை அருகே உள்ளது கோவானுார் கிராமம். இங்கு சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. நேற்று சிவகங்கையை சுற்றியுள்ள பகுதியில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் வழிபட வந்தனர். காலை 10:00 மணியில் இருந்தே கோவிலில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. பக்தர்கள் கோவிலின் முன் நீண்ட வரிசையில் தரிசனத்திற்காக காத்திருந்தனர். பக்தர்களை கட்டுப்படுத்த குறைந்த அளவிலேயே போலீசார் இருந்தனர். இதில் வி.ஐ.பி.,க்கள் சிலர் கோவிலுக்குள் பக்தர்கள் சாமி கும்பிட்டு விட்டு வரும் வழியில் சென்றதால் அந்த இடத்திலும் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது.விழா கமிட்டியை சேர்ந்தவர்கள் கோவிலின் முன்பக்க கதவை மூடி கொஞ்சம் கொஞ்சமாக பக்தர்கள் உள்ளே அனுப்பினர். வெயிலில் காத்திருந்த பக்தர்கள் சிலர் மயக்கம் அடைந்தனர். கதவை மூடியதால் விழா கமிட்டியை சேர்ந்தவர்களுக்கும் பக்தர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.சிவகங்கை நாகேந்திரன் கூறுகையில், நண்பர்களுடன் கோவானுார் கோவிலுக்கு சென்றேன். 3 மணி நேரம் காத்திருந்தேன் கூட்டத்தை கட்டுப்படுத்த முறையான போலீசார் பணியில் இல்லை. கோவில் முன் மதிய வெயிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். கோவிலின் கதவை பூட்டி உள்ளே உள்ள கூட்டத்தை வெளியேற்ற முடியாமல் பணியில் இருந்த போலீசார் சிரமபட்டனர்.போலீசார் கூறுகையில், தைப்பூசம் என்பதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவிலிலும் பூஜை நடக்கிறது. அனைத்து கோவில்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், என்றனர்.