சேதமடைந்த பாலத்தால் விபத்து அபாயம்
சிவகங்கை: சிவகங்கை நகர் மஜித்ரோட்டில் சேதமடைந்த பாலத்தால் விபத்து அபாயம் இருப்பதாக வாகன ஓட்டிகள் தெருவிக்கின்றனர்.சிவகங்கை நகர் மஜித்ரோட்டில் உழவர் சந்தை ரோடு திரும்பும் சந்திப்பில் சேதமடைந்த கழிவு நீர் செல்லும் கால்வாய் பாலம் உள்ளது.இந்த பகுதியில் ரோட்டின் இருபுறத்திலும் குறுகிய கால்வாய் பாலம் உள்ளது.இந்த பாலத்தை கடந்து தான் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆர்.டி.ஓ., அலுவலகம், எல்.ஐ.சி., அலுவலகம், கலெக்டர், எஸ்.பி., பள்ளி கல்வித் துறை, மின்வாரியம், நீதிமன்றம், அரசு பெண்கள் கல்லுாரி உள்ளிட்ட பிற அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும்.காலை மாலை நேரத்தில் பள்ளி வாகனங்கள் அதிகமாக இந்த பகுதியை கடந்து செல்கின்றன.இந்த பகுதியை கடந்து செல்லும் போது எதிரே கனரக வாகனம் வந்தால் பிற வாகனம் கடந்து செல்வது மிகவும் கடினம். பாலம் மிகவும் குறுகலாகவும் இரண்டு புறமும் பள்ளமாக இருப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.டூவீலரில் செல்பவர்கள் இரவு நேரத்தில் விபத்தில் சிக்குகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் இந்த சேதமடைந்த கழிவு நீர்கால்வாய் பாலத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.