உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை தி.மு.க., நிர்வாகி கொலையில் தொடர்புடையவர்கள் கொலை மிரட்டல்

சிவகங்கை தி.மு.க., நிர்வாகி கொலையில் தொடர்புடையவர்கள் கொலை மிரட்டல்

சிவகங்கை: சிவகங்கையில் தி.மு.க., விளையாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரவீன்குமார் கொலையில் தொடர்புடையவர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் நேற்று சாமியார்பட்டி விலக்கில் மறியலில் ஈடுபட்டனர்.சிவகங்கை அருகே சாமியார்பட்டியைச் சேர்ந்த பிரவீன் குமார் தி.மு.க., விளையாட்டு அணி துணை அமைப்பாளராக இருந்தார். இவரை நேற்று முன்தினம் சிலர் அவரது தோட்டத்தில் வைத்து கொலை செய்தனர். இக்கொலையில் சாமியார்பட்டி கருப்பையா மகன் விக்கி என்ற கருணாகரன் 20, சிவகங்கை காளவாசல் செல்வராஜ் மகன் பிரபாகரன் 19, திருப்புத்துார் நரசிங்க புரம் சூரியமூர்த்தி மகன் குரு 21, ஆகியோர் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.மூவரும் பெரியகோட்டை அருகே உள்ள மாங்குடியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற தனிப்படை போலீசாரை கண்டதும் 3 பேரும் தப்பிக்க முயன்றனர். போலீசார் விரட்டி சென்றதில் 3 பேருக்கும் கால் முறிவு ஏற்பட்டது. அவர்களை சிகிச்சைக்காக போலீசார் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இந்நிலையில் நேற்று காலை 10:00 மணிக்கு பிரவீன் குமாரின் உறவினர்கள் கொலை குற்றவாளிகளை என்கவுன்டர் செய்யக்கோரியும், கொலை மிரட்டல் விடுக்கும் கொலையில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மானாமதுரை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாமியார்பட்டி விலக்கில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தால் போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது. கூடுதல் எஸ்.பி., பிரான்சிஸ், டி.எஸ்.பி., அமல அட்வின், இன்ஸ்பெக்டர் அன்னராஜ் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ