உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பயிர்க்கடன் வழங்கலில் தாமதம்

பயிர்க்கடன் வழங்கலில் தாமதம்

இளையான்குடி: இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் வழங்க தாமதமாவதால் விவசாயிகள் சிரமப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட சாலைக்கிராமம்,கோட்டையூர், நகரகுடி,அண்டக்குடி உள்ளிட்ட 19 ஊர்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.இவற்றின் மூலம் விவசாயிகளுக்கு உரம்,பயிர்,நகை, கால்நடை உள்ளிட்ட கடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட 55 ஊராட்சிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த சில வாரங்களாக பெய்த மழையை தொடர்ந்து விவசாயிகள் நெல் விவசாயம் செய்யும் நிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வழங்கப்படும் பயிர் கடன் பெற விண்ணப்பம் செய்தால் அதனை வழங்க தாமதம் ஏற்படுவதால் விவசாய பணிகளில் தொய்வு ஏற்படுவதாக விவசாயிகள தெரிவிக்கின்றனர். விவசாய சங்க நிர்வாகி கல்வெளி பொட்டல் தங்கபாண்டியன் கூறியதாவது: இளையான்குடி தாலுகாவில் விவசாய பணிகளை ஆரம்பித்துள்ள நிலையில் பயிர் கடன் கேட்டு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு கோட்டையூர் உள்ளிட்ட சில தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் அதனை வழங்க தாமதம் ஆவதால் விவசாய பணிகளை மேற்கொண்டு செய்ய முடியவில்லை. 2 வருடங்களாக போதிய விளைச்சல் இல்லாமலும்,காப்பீட்டுத் தொகை வராமல் உள்ளதால் ஏற்கனவே கடனில் தத்தளித்து வரும் விவசாயிகள் மேற்கொண்டு கடன் பெற முடியாத நிலை இருப்பதினால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பயிர் கடன்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அதிகாரி ஒருவர் கூறியதாவது: இளையான்குடி பகுதியில் கடந்த வருடம் பயிர் கடன் வாங்கிய அனைவருக்கும் தற்போதைய வருடத்திற்குரிய பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக பயிர் கடன் கேட்டு விண்ணப்பம் செய்தவர்களுக்கு வழங்குவதற் குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இன்னும் ஒரு வார காலத்திற்குள் வழங்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை