இளையான்குடி பேரூராட்சியில் வளர்ச்சி பணிகள்...கேள்விக்குறி: அனைத்து திட்டங்களுக்கும் ஒரு பிரிவினர் எதிர்ப்பு
இளையான்குடி: இளையான்குடியில் அரசு சார்பில் ரூ. பல கோடி செலவில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டும் அவை முறையாக பயன்பாட்டிற்கு வராததால் திட்டங்கள் வீணாகி வருகிறது. இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அரசு மருத்துவமனை அருகே பஸ் ஸ்டாண்ட் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் செயல்பட்டு வந்தது. பஜார், புதுார் செல்லும் ரோடு உள்ளிட்ட முக்கிய ரோடுகள் அனைத்திலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட நேரம் வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட அரசு முடிவு செய்த நிலையில் பஸ் ஸ்டாண்டை இங்கிருந்து மாற்றக்கூடாது என ஒரு தரப்பினர் போராடிய நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ரூ. 3.75 கோடி செலவில் சிவகங்கை ரோட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு கடந்த ஆண்டு பிப்ரவரியில் திறக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் கட்டப்பட்ட நிலையில் பஸ்கள் வர அதிகாரிகள் முயற்சி எடுக்காததால் பஸ் ஸ்டாண்ட் காட்சி பொருளாகி வருகிறது. மக்கள் புதிய பஸ் ஸ்டாண்டை தொடர்ந்து புறக்கணித்து வருவதால் தற்போது வரை புதிய பஸ் ஸ்டாண்ட் முழுமையாக செயல்படாமல் ஒன்றிரண்டு பஸ்கள் மட்டுமே செல்கிறது. பெரும்பான்மையான பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்டிற்கே செல்வதினால் மீண்டும் இளையான்குடி பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. புதிய பஸ் ஸ்டாண்ட் கடைகளில் வியாபாரம் செய்ய வியாபாரிகள் முன்வராத நிலையில் ஒன்றிரண்டு கடைகள் மட்டுமே திறந்துள்ளது. *அரசு மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாமல் மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது செயல்படும் இடத்திலேயே அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் வேறு இடத்திற்கு அரசு மருத்துவமனையை கொண்டு செல்லக்கூடாது எனவும் மக்கள் கூறி வருகின்றனர். * இளையான்குடி பேரூராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பையை தற்போதுள்ள குப்பை கிடங்கில் கொட்டுவதற்கு போதிய இடம் இல்லாததால் வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிற நிலையில் அதற்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது.இதே போன்று இளையான்குடி பகுதியில் பல கோடி செலவில் புதிய வளர்ச்சி பணிகள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்கும் நிலையில் அதனை சிலர் தடுத்து வருவதால் அதிகாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் தவித்து வருகின்றனர். அதிகாரிகள் கூறியதாவது: இளையான்குடி பேரூராட்சி பகுதி நாளுக்கு நாள் வளர்ந்து வருகிற நிலையில் 10 வருடங்களுக்கு முன்பிருந்த நிலையே நீடித்து வருகிறது. தற்போது அதிகளவு வாகனப்பெருக்கம் மற்றும் மக்கள் தொகை காரணமாக எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. இதனை சரி செய்ய முடியாமல் போலீசார் மற்றும் அதிகாரிகள் திணறி வருகின்றனர். புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டும் அதனை மக்கள் பயன்படுத்தாத நிலையில் அரசின் நிதி வீணாகி போய் உள்ளது. இதேபோன்று இளையான்குடி பகுதியில் துவங்கப்பட உள்ள வளர்ச்சி திட்ட பணிகளுக்கும் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதால் நகரம் விரிவடையாமல் அனைத்து தரப்பினருக்கும் வரும் காலங்களில் மிகவும் பாதிப்பு ஏற்படும் என்றனர்.