உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருச்செந்துார் கோயிலில் பக்தர் பலி; நிர்வாகம் மீது உறவினர்கள் புகார்

திருச்செந்துார் கோயிலில் பக்தர் பலி; நிர்வாகம் மீது உறவினர்கள் புகார்

காரைக்குடி; காரைக்குடியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி, திருச்செந்துாரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். கோயிலில் மருத்துவ வசதி இல்லாததே உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் கூறினர்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நா. புதூர் சொக்கலிங்கம் செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் ஓம் குமார் 50. ஜவுளி வியாபாரி. இவர் நேற்று முன்தினம் பேரனுக்கு மொட்டை அடித்து காது குத்துவதற்காக குடும்பத்தினருடன் திருச்செந்துார் கோயிலுக்கு சென்றுள்ளார். ரூ.100 டிக்கெட்டில் வரிசையில் சென்றபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் நேற்று காரைக்குடிக்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்கு செய்யப்பட்டது.உறவினர்கள் கூறியது: கூட்ட நெரிசலில் மூச்சு திணறி கீழே விழுந்து விட்டதாக அலைபேசி அழைப்பு வந்தது. நாங்கள் கிளம்பி செல்வதற்குள் அவர் இறந்துவிட்டார் என தகவல் கூறினர். கூட்டத்திலிருந்து வெளியே வருவதற்கே அரை மணி நேரமாகி விட்டது. ஆம்புலன்ஸ் வருவதற்கும் தாமதாகி விட்டது. மருத்துவ வசதியே இல்லை.கோயிலில் அவசர மருத்துவ வசதி இருந்தால் காப்பாற்றி இருக்கலாம். ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் வந்ததால் இறந்து விட்டார் என சாதாரணமாக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கூறுகிறார். இறப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு வரை அவர் கடலில் குளித்து விளையாடிய வீடியோ கூட இருக்கிறது. நாங்கள் சொன்ன எதையும் அவர்கள் கேட்கவில்லை. இறந்தவரின் உடல் கிடைப்பதற்காக, போலீஸ்காரர் கூறியதைத்தான் நாங்கள் எழுதிக் கொடுத்தோம். ரூ. 100 டிக்கெட்டில் சென்ற எங்களுக்கே இந்த நிலை என்றால் இலவச தரிசனம் செல்வோர் நிலை என்ன. தண்ணீர் வசதி கூட இல்லை என குமுறினர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ