உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பொய்த்த மழையால் கருகியது நெற்பயிர் ; கவலையில் இளையான்குடி விவசாயிகள்

பொய்த்த மழையால் கருகியது நெற்பயிர் ; கவலையில் இளையான்குடி விவசாயிகள்

இளையான்குடி : இளையான்குடி,மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பெய்த சிறிய மழை கிராமப் பகுதிகளில் பெய்யாத காரணத்தினால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இளையான்குடி,மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயில் கடுமையாக அடித்து வருகிறது. மானாவாரியாக விதைக்கப்பட்ட நெல் முளைத்துள்ள நிலையில் அவை தொடர்ந்து வளர போதிய மழை இல்லாத காரணத்தினால் பல இடங்களில் நெற்பயிர் கருகி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். நேற்று இளையான்குடி,மானாமதுரை நகர் பகுதிகளில் ஓரளவிற்கு பெய்த மழை சுற்று வட்டார கிராம பகுதிகளில் பெய்யவில்லை. கல்வெளி பொட்டல் விவசாய சங்க நிர்வாகி தங்கபாண்டியன் கூறியதாவது:இளையான்குடி,சாலைக் கிராமம்,சூராணம், முனைவென்றி சுற்று வட்டார கிராம பகுதிகளில் குண்டு மிளகாய்க்கு அடுத்தபடியாக மானாவாரியாக நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நெல் விதைகளை தூவி தற்போது அவை முளைத்து வருகின்ற நிலையில் போதிய மழை இல்லாத காரணத்தினால் நெற்பயிர்கள் கருகி வருகின்றன. தொடர்ந்து மழையும் ஏமாற்றி வருவதால் கடன் வாங்கி விவசாய பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட வைகை பாசன பகுதிகளுக்கு உடனடியாக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். விவசாயிகள் கண்ணீர்: தேவகோட்டை:தேவகோட்டை தாலுகா முழுவதும் மழை பெய்யாததால் பயிர்கள் முளைக்காத நிலையில் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில்மழை பெய்யும் என வானிலை அறிவித்தும் கூட மழை பெய்யாமல் பொய்த்து விட்டது. தேவகோட்டை நகரில் மழை பெய்தாலும் கிராமப்புறங்களில் மழை பெய்வதில்லை. கண்ணங்குடி ஒன்றிய பகுதியில் ஒரு சில கிராமங்களில் அரசு விதை மையத்தில் வாங்கிய டீலக்ஸ் பொன்னிசுத்தமாக முளைக்கவில்லை என விவசாயிகள் புகார் கூறுகின்றனர். இந்த நிலையில் அனுமந்தக்குடி, திருப்பாக்கோட்டை, தத்தணி, மீனாப்பூர், சாத்தனக்கோட்டை, சடையமங்களம் பகுதியில் நெல் விதைத்து இரண்டு மாதமாகியும் பயிர் வளரவே இல்லை. மார்கழி, தை மழையை தாங்கக் கூடிய நெல் டீலக்ஸ் பொன்னி நெல்லையே பயிரிடுகிறார்கள். ஆனால் அந்த பயிரும் வளரவில்லை. ஆரம்பத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்த மழையில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாயத்தில் இறங்கினர். தொடர்மழை இல்லாததால் நிலைமை தலைகீழாக போய்விட்டது. ஒரு சிலர் பம்ப்செட்,ஆழ்துளை கிணறு வைத்துள்ளதால் முளைத்துள்ளது. நெல் விதைத்தவுடன் ஒரு வாரத்தில் களைக்கொல்லி அடிக்க வேண்டும். ஆனால் இரண்டு மாதமாகியும் அதற்கான நிலைமையே இன்னும் வரவில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர். பெண் விவசாயிகள் அனுமந்தக்குடி அருள்மேரி, தனச்செல்வி கூறியது: விவசாயமே போச்சுங்க... சின்ன சின்ன மழை பெய்யும். பயிர் வளர்ந்து களைக்கொல்லி அடித்து , பயிர் வளர்ந்து பருவமழை நேரத்தில் நெற்பயிர் செழித்து வளரும் என்ற நம்பிக்கை இருக்கும் நேரம். ஆனால் தற்போது விவசாயம் கேள்விக்குறி யாகி விட்டது. வயல் வைத்திருப்பவர்கள் மட்டுமின்றிவிவசாய பணிகள் செய்து வருபவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நேரம் களையெடுக்கும் பணி மும்முரமாக இருக்கும். நல்ல மழை பொழிய வேண்டும் ஆனால் எதுவும் இல்லை என்றனர் கவலையுடன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி