உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தாசில்தார்களுக்கு பணியிட மாறுதல்; திணறும் மாவட்ட நிர்வாகம்

தாசில்தார்களுக்கு பணியிட மாறுதல்; திணறும் மாவட்ட நிர்வாகம்

சிவகங்கை; சிவகங்கை மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் ஒரு ஆண்டிற்கு மேல் பணிபுரிந்த தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்ய முடியாமல் மாவட்ட நிர்வாகம் திணறி வருகிறது. இம்மாவட்டத்தில் வருவாய்துறையில் தாசில்தார் அந்தஸ்தில் 54 பேர் வரை பணிபுரிகின்றனர். இவர்களில் 9 பேர் சிவகங்கை, காரைக்குடி, காளையார்கோவில், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, தேவகோட்டை, திருப்புத்துார், சிங்கம்புணரி ஆகிய ஒன்பது தாலுகாக்களில் ரெகுலர் தாசில்தார்களாக பணிபுரிந்து வருகின்றனர். மற்றவர்கள் கோட்டாட்சியர்களின் பி.ஏ., நில எடுப்பு பிரிவு, டாஸ்மாக் மாவட்ட அலுவலகம், தேர்தல் பிரிவு, பேரிடர் மேலாண்மை, அகதிகள் முகாம், சிப்காட் , ஹிந்து அறநிலையத்துறை உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் தாசில்தார்களாக பணிபுரிந்து வருகின்றனர். தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும் தாசில்தார்கள் ஒரு ஆண்டு பணிபுரிந்தால் அவர்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும். அதே போன்று விருப்பத்தின் அடிப்படையில் பிற சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும் தாசில்தார்களுக்கு, தாலுகா அலுவலகங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்பினை வழங்க வேண்டும். ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் 2 ஆண்டுக்கும் மேலாக ஒரே தாலுகாவில் பல இடங்களில் தாசில்தார்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை பணியிட மாறுதல் செய்து, தாலுகா அலுவலகங்களில் நியமிக்க தாசில்தார்கள் பட்டியலை பணி மூப்பு அடிப்படையில் தயாரிக்க வேண்டும். இம்மாவட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நல தாசில்தார் அலுவலகத்தில் மாணவர்களுக்கு அரசு தேங்காய் எண்ணெய், சோப்பு போன்றவற்றை வாங்குவதற்காக அரசு ஒதுக்கிய ரூ.2.35 கோடியை முறைகேடாக எடுத்தது தொடர்பாக 4 தாசில்தார்கள் உட்பட சிலர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டனர். ஆதிதிராவிடர் நல தாசில்தார் அலுவலகத்தில் பணியில் இருந்த 3 தாசில்தார்களுக்கு அப்போதைய கலெக்டர் ஆஷா அஜித், 17 பி., நோட்டீஸ் வழங்கியுள்ளார். இது போன்ற சிக்கலில் உள்ள தாசில்தார்களுக்கு, பணி மூப்பு அடிப்படையில் பணியிட மாறுதலோ, தாலுகாக்களில் பணியிடமும் வழங்க முடியாத நிலையில் மாவட்ட நிர்வாகம் தவிக்கிறது. 2026 சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வாக்காளர் சுருக்கத்திருத்தம் மேற்கொள்ளும் பணிக்கு அனுபவம் வாய்ந்த தாசில்தார்கள், தாலுகா அலுவலகங்களில் நியமிக்கப்பட வேண்டும். வருவாய்துறை அலுவலர்கள் சிலர் கூறியதாவது: தற்போது தாலுகா அலுவலகங்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த வருவாய்துறையில் பணிச்சுமை அதிகரித்துவிட்டது. இந்நிலையில் அரசின் புதிய புதிய திட்டப்பணிகளை செய்ய முடியாமல் தாசில்தார்கள் திணறி வருகின்றனர். இதன் காரணமாகவே தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும் பெரும்பாலான தாசில்தார்கள், ரெகுலர் பணியில் இருந்து தங்களை விடுவிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் விருப்ப மனு அளித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் தான் தாசில்தார்களுக்கு பணியிட மாறுத ல் வழங்க வேண்டும். அதே நேரம் தேர்தல் கமிஷனும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட இருப்பதால், தேர்தல் கமி ஷன் அனுமதியின்றி, வருவாய்துறை அலுவலர்களை பணியிட மாறுதல் செய்யகூடாது என தெரிவித்துவிட்டது. இதன் காரணமாக கூட தாசில்தார் பணியிட மாறுதல் செய்ய முடியாத நிலை மாவட்ட நிர்வாகத்திற்கு ஏற்பட்டிருக்கலாம், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை