கலப்பட தேன் சாப்பிட்டு பாதிப்பு சிறுவனை காப்பாற்றிய டாக்டர்கள்
சிவகங்கை: கெட்டுப்போன கலப்பட தேனை சாப்பிட்ட 4 வயது சிறுவன் 7 நாள் சிகிச்சைக்கு பின் மீண்டார். சிவகங்கை ரோஸ் நகர் முத்துலட்சுமி மகன் நிதின் பாலசேகர் 4. இவரை நவ.26 அதிகாலை 3:30 மணி அளவில் சுயநினைவில்லாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். டாக்டர்கள் குழு விசாரித்ததில் முதல்நாள் இரவு வயிற்று வலிக்காக பெற்றோர் தேன் கொடுத்துள்ளனர். அந்த தேன் காலாவதியான கலப்பட தேன் என தெரியவந்தது. சிறுவனை பரிசோதித்ததில் ரத்த ஓட்டம் குறைவாக இருந்தது. சிறுவனுக்கு உடனடியாக செயற்கை சுவாசமும்,உயிர்காக்கும் மருந்தும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து 7 நாட்கள் வென்டிலேட்டர் சிகிச்சையும் நரம்பு தளர்ச்சிக்கான மருந்தும் கொடுக்கப்பட்டது. சிறுவனின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. குழந்தைகள் நல மருத்துவர்கள் குழு பாலசுப்பிரமணியன், மயக்கவியல் டாக்டர்கள் குழுவினரை கல்லுாரி முதல்வர் சீனிவாசன், நிலையமருத்துவர் முகமதுரபி, துணை நிலைய மருத்துவர் தென்றல், மருத்துவ கண்காணிப்பாளர் ஜடா முனி பாராட்டினர்.