| ADDED : மார் 27, 2025 07:01 AM
காரைக்குடி: காரைக்குடியில் உள்ள டவுன் பஸ்களில் விபத்துக்களை தடுக்க கதவு பொருத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து பஸ்களிலும் கதவு பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.காரைக்குடியிலிருந்து புதுவயல், கானாடுகாத்தான், குன்றக்குடி, கல்லல், அமராவதிபுதூர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. காரைக்குடிக்கு தினமும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் மற்றும் கிராம மக்கள் வந்து செல்கின்றனர். பள்ளத்தூர், அமராவதிபுதூர், கல்லல், குன்றக்குடி, மானகிரி, புதுவயல், என சுற்றுவட்டாரத்தை சேர்ந்தோர் பெரும்பாலும் டவுன் பஸ்சையே நம்பியுள்ளனர். பள்ளி கல்லூரி செல்ல, போதிய பஸ் கிடைப்பதில்லை. இதனால் வேறு வழியின்றி கூட்டமாக பஸ்களில் மாணவர்கள் ஏறிச் செல்லும் நிலை உள்ளது. தவிர, படிகளில் மாணவர்கள் ஆபத்தான பயணமும் மேற்கொண்டு வருகின்றனர்.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், மாணவர்களின் பாதுகாப்பு கருதி டவுன் பஸ் படிகளில் கதவு பொருத்தும் பணி நடந்து வந்தது. இந்நிலையில் காரைக்குடி பகுதியில் தற்போது ஒரு சில பஸ்களில் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட அனைத்து டவுன் பஸ்களிலும் கதவுகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.