உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவிப்பு

அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவிப்பு

மானாமதுரை: மாவட்ட அளவில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறையால், காலநிலை மாற்றத்திற்கேற்ப ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர். மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், காரைக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனை, தேவகோட்டை, திருப்புத்துார், சிங்கம்புணரியில் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.இங்கு தினந்தோறும் சராசரியாக 200லிருந்து 800 பேர் வரை வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மழை காலம் துவங்கியுள்ளதால் ஏராளமானோர் காய்ச்சல், ஜலதோஷம், இருமல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.ஆனால் மேற்கண்ட மருத்துவமனைகளில் கடந்த சில மாதங்களாக டாக்டர்கள் பற்றாக்குறையாக இருப்பதினால் சிகிச்சை பெற முடியாமல் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மேலும் ஏராளமான மருத்துவமனைகளிலும் மகப்பேறு, எலும்பு முறிவு, குழந்தைகள், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு டாக்டர்கள் பணியிடம் நீண்ட மாதங்களாக காலியாக இருப்பதால், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் விபத்துகளில் சிக்குபவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இது குறித்து இளையான்குடி நாகூர் மீரா கூறியதாவது: இளையான்குடி அரசு மருத்துவமனையில் 2 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். அதிக நோயாளிகள் சிகிச்சைபெற முடியாமல் தவிக்கின்றனர்.குறிப்பாக விபத்தில் சிக்குவோருக்கு அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க டாக்டர்களின்றி, சிவகங்கை, மதுரை அரசு மருத்துவ கல்லுாரிகளுக்கு அனுப்புகின்றனர்.உரியே நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள டாக்டர், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இது குறித்து மருத்துவத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறை குறித்து, அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம். டாக்டர்கள் பற்றாக்குறை உள்ள மருத்துவமனைகளுக்கு, பிற மருத்துவமனை டாக்டர்களை மாற்றுப்பணியாக அனுப்புகிறோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !