இன்ஜினியர் கொலை உறவினர்கள் போராட்டம்
காரைக்குடி: காரைக்குடியில் இன்ஜினியரை கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம் அரியக்குடி சுப்பிரமணியன் மகன் பழனியப்பன் 34. சிவில் இன்ஜினியர். சாக்கோட்டை ஒன்றிய பா.ஜ., முன்னாள் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். நேற்று முன்தினம், காரைக்குடி பொன்நகர் அருகே புதிதாக கட்டி வரும் கட்டடத்தை பார்வையிட்ட போது பழனியப்பனை, 3 பேர் ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தனர். பழனியப்பன் உடல் காரைக்குடி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டிருந்தது. இறந்தவரின் உறவினர்கள் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உடற்கூராய்வுக்கு மறுப்பு தெரிவித்ததோடு மறியலில் ஈடுபட்டனர். ஏ.எஸ்.பி., ஆஷிஸ் புனியா நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.