இளையான்குடிக்கு வைகை ஆற்று தண்ணீர் எதிர்பார்ப்பு...: சுப்பன் கால்வாய் கண்மாய்களில் நீர்வரத்தின்றி ஏக்கம்
இப்பகுதியில் 300 க்கும் மேற்பட்ட கிராமங்களில் குண்டு மிளகாய் சாகுபடியுடன், நெல் விவசாயமும் நடக்கிறது. வானம் பார்த்த பூமியான இப்பகுதியில் மழையை நம்பியே நெல் விவசாயம் உண்டு. இத்தாலுகாவில் 30 கிராம கண்மாய்களுக்கு வைகை ஆற்றில் இருந்து, பார்த்திபனுார் மதகு அணை இடது பிரதான கால்வாய் மூலம் தண்ணீர் பாசனத்திற்கு நீர் கொண்டு வரப்படுகிறது. இளையான்குடி பேரூராட்சி அலுவலகம் எதிரே இளையான்குடி கண்மாய் மூலம் வடக்கு, தெற்கு மற்றும் இடையவலசை, கொங்கம்பட்டி, சீத்துாரணி, கல்லுாரணி கிராமப்புற வயல்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில ஆண்டாக இப்பகுதிக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் போதிய அளவு வரவில்லை. இதனால் இப்பகுதியில் விவசாயம் குறைந்து வருகிறது. இக்கண்மாயில் முழுமையாக தண்ணீர் தேங்கும் விதமாக மானாமதுரை வைகை ஆற்றில் இருந்து உபரியாக வெளியேறும் தண்ணீரை சுப்பன் கால்வாய் வழியாக கொண்டு வர திட்டமிட்டு, கால்வாய் அமைத்தனர். ஆனால், சுப்பன் கால்வாய் வழியாகவும் வைகை ஆற்று தண்ணீர் வந்தபாடில்லை. இந்நிலையில் மழையை நம்பி ஏராளமான விவசாயிகள் மானாவாரியாக நெல்லை நடவு செய்துள்ளனர். நடவு செய்த நெல்லை விளைவிக்க வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் வகையில் சுப்பன் கால்வாயை சீரமைத்து நீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்மாய்க்கு வராத வைகை தண்ணீர் இது குறித்து பேரூராட்சி கவுன்சிலர் நாகூர் மீரா கூறியதாவது, இளையான்குடி கண்மாயில் மொத்தம் 5 மடைகள் உள்ள நிலையில் அவற்றில் 2 தூர்ந்து போய்விட்டது. மேலும் வைகை ஆற்றில் இருந்து வரும் கால்வாய்களிலும் ஒரு சில இடங்களில் தண்ணீர் வெளியேறி வருவதனால் கண்மாய்க்கு முழுமையாக தண்ணீர் வருவதில்லை. கண்மாயில் கருவேல மரங்களும் அதிகளவில் வளர்ந்துள்ளது. இளையான்குடி மற்றும் சுற்றுவட்டார கண்மாய்களில் தண்ணீர் தேங்கும் விதமாக சுப்பன் கால்வாயில் இருந்து வைகை ஆற்று நீர் கொண்டு வரவேண்டும் என்றார். வைகை ஆற்று நீர் வர நடவடிக்கை இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது, சுப்பன் கால்வாய் திட்டத்தை புதிய வழித்தடத்தில் செயல்படுத்துவது பற்றி அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். வைகை ஆற்றில் இருந்து இளையான்குடிக்கு தண்ணீர் கொண்டுவருவதற்கான நடவடிக்கையும் எடுத்து வருகிறோம் என்றனர்.