உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வாழைக்கு இழப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு

வாழைக்கு இழப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு

திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் பிரதான பயிரான வாழைக்கு காப்பீடு செய்தாலும் இழப்பீடு கிடைப்பதில்லை என விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.திருப்புவனம் வட்டாரத்தில் நெல், கரும்பு, தென்னைக்கு அடுத்தபடியாக வாழை பயிரிடப்படுகிறது. திருப்புவனம், கலியாந்தூர், நயினார்பேட்டை, கானூர், கல்லூரணி, மாரநாடு உள்ளிட்ட பகுதிகளில் நாட்டு வாழை, ஒட்டு வாழையே அதிகளவு பயிரிடப்படுகிறது. ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் வரை செலவு செய்து ஆயிரம் கன்றுகள் வரை பயிரிடுகின்றனர். 8வது மாதத்தில் இருந்து பக்க கன்றுகள் மூலம் வாழை இலை அறுவடை தொடங்குகிறது. அதன்பின் 10வது மாதத்தில் வாழை காய் அறுவடை நடைபெறும், அதன்பின்னும் தொடர்ச்சியாக 3 மாதங்கள் வரை வாழை இலை அறுவடை செய்யப்படும்.வாழைக்கு எக்டேருக்கு ஆறாயிரத்து 249 ரூபாய் பிரீமியம் செலுத்தினால் வாழையால் ஏற்படும் நஷ்டத்திற்கு எக்டேருக்கு ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 982 ரூபாய் இழப்பீடு கிடைக்கும். ஆனால் நடைமுறையில் ஒட்டு மொத்தமாக ஒரு வாழையில் நோய் தாக்குதல், வறட்சி உள்ளிட்டவை ஏற்பட்டு நஷ்டம் அடைந்தால் மட்டுமே இழப்பீடு கிடைக்கிறது. விவசாயிகள் தரப்பில் கூறுகையில், வாழையில் எப்போது நஷ்டம் ஏற்படும் என கூற முடியாது, திடீரென காற்று அதிகமாக வீசினால் இலைகள் கிழிந்து விடும், மரங்களும் முறிந்து விடும், அனைத்து விவசாயிகளுக்கும் நஷ்டம் ஏற்படாது. வெட்ட வெளியில் மற்ற பகுதிகளில் விளைச்சல் இல்லாத போது காற்று வீசினால் மரங்கள் முறிந்து நஷ்டத்தை ஏற்படுத்தும்.ஆனால் அனைத்து விவசாயிகளுக்கும் மரங்கள் முறிந்தால் மட்டுமே இழப்பீடு கிடைக்கும். இதே போல நோய் தாக்குதல், வறட்சி காலங்களிலும் வாழை விவசாயிகளுக்கு அடிக்கடி நஷ்டம் ஏற்படுவதால் வாழை விவசாயம்பெருமளவு குறைந்து வருகிறது. கானுார் ரகுராமன் கூறுகையில், வாழைக்கு காப்பீடு செய்வதில் எந்த லாபமும் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் மூன்று ஏக்கரில் வாழை பயிரிட்டிருந்தேன், கடும் வறட்சி காரணமாக நஷ்டம் ஏற்பட்டது. வாழைக்கு காப்பீடு செய்ததால் அதிகாரிகளிடம் முறையிட்ட போது திருப்பாச்சேத்தி பிர்க்கா முழுவதும் வறட்சி என்றால் மட்டுமே இழப்பீடு கிடைக்கும் என தெரிவித்து விட்டனர். இதனால் அடுத்தடுத்து காப்பீடு செய்வதில்லை, என்றார். வேளாண் அதிகாரிகள் கூறுகையில், வாழைக்கு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் தொடங்கி பிப்ரவரி வரை காப்பீடு செய்யலாம், கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கும் விவசாயிகளுக்கு வங்கி நிர்வாகமே காப்பீடு செய்து விடும், கடன் பெறாமல் விவசாயம் செய்பவர்கள் கட்டாயம் காப்பீடு செய்ய வேண்டும், என்றனர். ஒவ்வொரு வருடமும் வாழையில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவது வாடிக்கை, ஆனால் இதுவரை எந்த விவசாயிக்கும் இழப்பீடு வழங்கியதே இல்லை. மற்ற பயிர்களை விட வாழைக்கு பிரீமியம் தொகை அதிகம், ஆனால் இழப்பீடு கிடைக்காததால் காப்பீடு செய்ய யாரும் முன்வருவதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை