உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வேலை உறுதி திட்ட பணியால் விவசாயிகள் தவிப்பு

வேலை உறுதி திட்ட பணியால் விவசாயிகள் தவிப்பு

திருப்புவனம்: தமிழகம் முழுவதும் சம்பா சாகுபடி காலங்களில் 100 நாள் திட்ட பணிகள் செயல்படுத்துவதால் விவசாயிகள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை நம்பி சம்பா பருவ சாகுபடி நடந்து வருகிறது. வைகை ஆற்றை நம்பி திருப்புவனம் வட்டாரத்தில் சம்பா பருவத்தில் நான்காயிரம் ஹெக்டேரில் நெல் விவசாயம் நடந்து வருகிறது. செப்டம்பர் முதல் நாற்றங்கால் தயார் செய்வது, வாய்க்கால்களை சீர் செய்வது, வரப்பு வெட்டுவது என விவசாயிகள் பிசியாகி விடுவார்கள், நாற்றங்காலில் நாற்று வளர்ந்த பின் அதனை பறித்து நடவு செய்வது, மருந்து தெளிப்பது, களை எடுப்பது என அனைத்திற்குமே விவசாய கூலி தொழிலாளர்கள் தேவை. கடந்த 2011ல் 18 ஆயிரத்து 222 விவசாய கூலி தொழிலாளர்கள் இருந்தனர். தற்போது இதில் 50 சதவிகிதம் பேர் கூட விவசாய பணிகளுக்கு வருவதில்லை. இதனால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். நாற்று நடவு செய்ய ஏக்கருக்கு 10 பேர் வீதம் காலை எட்டு மணி முதல் மாலை ஐந்து மணிக்குள் நடவு செய்து விடுவார்கள், ஏக்கருக்கு மூவாயிரம் ரூபாய் (பத்து பேருக்கும் சேர்த்து) மொத்தமாக வழங்கப்படும், காலை மாலை என இருவேளையும் பத்து பேருக்கும் டீ, வடை, பஜ்ஜி வழங்க வேண்டும். வெளியூர் நபர்களுக்கு வண்டி வாடகை ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும். ஆனால் விவசாய கூலி வேலைக்கு பலரும் வர மறுக்கின்றனர். கண்மாய்களுக்கு தண்ணீர் வந்து கொண்டுள்ள நிலையில் கட்டமன்கோட்டை, கொந்தகை, திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பணிகள் தொடங்கியுள்ளன. நடவு பணிக்கு ஆட்கள் கிடைக்காததால் விவவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். விவசாயிகள் கூறியதாவது, தன்னந்தனியாக நாற்று பறித்து நடவு செய்து வருகிறோம். விவசாய காலமாக செப்., முதல் டிச., வரை வேலை உறுதி திட்ட பணிகளை நிறுத்தி வைக்கலாம். விவசாய வேலை தெரிந்தவர்களே 100 நாள் திட்ட பணிக்கு சென்று விடுகின்றனர். இதனால் விவசாயம் செய்யவே முடியவில்லை. விவசாயத்தில் குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டுமே இயந்திரங்கள் பயன்படுத்த முடியும். மற்ற பணிகளுக்கு ஆட்கள் மூலம் மேற்கொண்டால் தான் விளைச்சல் கிடைக்கும். வயல்களில் விவசாயம் செய்யாவிட்டால் கருவேல மரம் வளர்ந்து விடும் என்பதால் வேறு வழியின்றி விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை