மேலும் செய்திகள்
விவசாய கூலி உயர்வால் தவிக்கும் விவசாயிகள்
22-Nov-2024
திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் கூலி ஆட்கள் தட்டுப்பாடு காரணமாக நெல், வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் வாழைக்கு மாறி வருகின்றனர். திருப்புவனம் வட்டாரத்தில் பத்தாயிரம் ஏக்கரில் நெல், வாழை 348 எக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. இதுதவிர தென்னை, கரும்பு, பருத்தி, மிளகாய், வெண்டை, கத்தரி உள்ளிட்ட விவசாயமும் செய்யப்படுகிறது.இதில் கரும்பு, நெல் விவசாயத்திற்கு கூலி ஆட்கள் கட்டாயம் தேவை, உழவு பணி, வரப்பு வெட்ட, நாற்றங்கால் அமைக்க, நாற்று பறிக்க, நடவு செய்ய, மருந்து தெளிக்க, தண்ணீர் பாய்ச்ச என அனைத்தும் விவசாய கூலி ஆட்களை நம்பியே நடைபெறுகிறது.திருப்புவனம் வட்டாரத்தில் மழவராயனேந்தல் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் தான் விவசாய கூலி தொழிலாளர்கள் உள்ளனர். நாள் ஒன்றுக்கு (காலை 9:00 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை) 400 ரூபாயில் தொடங்கி ஆயிரம் ரூபாய் வரை கூலி வழங்கப்படுகிறது. அப்படி இருந்தும் கூலி வேலைக்கு ஆட்கள் வருவதில்லை.திருப்புவனம் வட்டாரத்தில் கூலி தொழிலாளர்கள் தட்டுப்பாடு காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் 100 நாள் திட்டத்தை விவசாய காலம் முடியும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் அல்லது கேரளாவைப் போல விவசாய பணிகளுக்கு 100 நாள் திட்ட பணியாளர்களை அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.எம்.பறையங்குளம் விவசாயி குருநாதன் கூறுகையில்: பத்து ஏக்கரில் நெல், வெங்காயம், பருத்தி, மிளகாய் சாகுபடி செய்து வந்தேன், கடந்த சில வருடங்களாக கூலி தொழிலாளர்கள் கிடைப்பதே இல்லை. அப்படியே வந்தாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பணி செய்ய மறுக்கின்றனர். இதனால் மற்ற விவசாயத்தையும் விட்டு விட்டு வாழை பயிரிட்டுள்ளேன். அதிலும் ஆறு ஏக்கரில் மட்டும்தான் விவசாயம் செய்து வருகிறேன். வாழைக்கு முதல் ஆறு மாதம் மட்டும்தான் வேலை இருக்கும் அதன்பின் தண்ணீர் பாய்ச்சுவது மட்டும் தான் பணி என்பதால் வாழை பயிரிட்டுள்ளேன்.இப்பகுதியில் வாழை பயிரிடுவது கிடையாது, கூலி தொழிலாளர்கள் தட்டுப்பாடு காரணமாக வாழை விவசாயத்திற்கு மாறியுள்ளேன், என்றார்.
22-Nov-2024