கணக்கன் கண்மாய் மடை ஆக்கிரமிப்பு விவசாயிகள் மனு
சிவகங்கை: காளையார்கோவில் அருகே இத்திக்குடி கணக்கன் கண்மாய் மடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.காளையார்கோவில் ஒன்றியம், சிலுக்கப்பட்டி அருகே இத்திக்குடி கிராமத்தில் 150 விவசாய குடும்பத்தினர் வசிக்கின்றனர்.விவசாயிகள் அங்குள்ள இத்திக்குடி கணக்கன் கண்மாயில் உள்ள 3 மடைகள் மூலம் தண்ணீர் பெற்று, நெல்நடவு செய்தனர். கண்மாயின் வடக்கு, தெற்கு, கிழக்கு பகுதியில் தலா ஒரு மடை வீதம் உள்ளன.இந்த மடைகளில் வடக்கு பகுதியில் உள்ள கண்மாய் மடையை வருவாய் கணக்கில் தனியார் பெயருக்கு பட்டா போட்டு கொடுத்துள்ளனர். இதனால் கண்மாய் நீரை பகிர முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே வருவாய் கணக்கில் கண்மாய் மடையை தனியார் பட்டா பெயரில் இருந்து நீக்கி, ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள இத்தியக்குடி கணக்கன் கண்மாய் பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும் என இக்கிராம விவசாயிகள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.