திருப்புவனத்தில் விவசாய பணி துவக்கம் பன்றிகளை பிடிக்க விவசாயிகள் கோரிக்கை
திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே விவசாயத்தை அழிக்கும் பன்றிகளை பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்புவனம் வட்டாரத்தில் நெல், வாழை, கரும்பு, தென்னை உள்ளிட்ட விவசாயம் நடைபெறுகிறது. செப்டம்பரில் வடகிழக்கு பருவமழையை நம்பி 10 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு பணி நடைபெற உள்ளன. விவசாயிகள் நிலங்களை விதைப்பு பணிக்காக தயார் செய்து வருகின்றனர். மாவட்டத்திலேயே திருப்புவனம் வட்டாரத்தில் தான் பன்றிகள் அதிகஅளவில் உள்ளன. திருப்புவனம், மாரநாடு, பிரமனுார், பழையனுார்உள்ளிட்ட கண்மாய்களில் உள்ள கருவேல மர காட்டினுள் பன்றிகள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன. பகல் முழுவதும் கருவேல மர காட்டினுள் தங்கும் இவை இரவில் வெளியே வந்து விவசாய நிலங்களை பாழக்கி வருகிறது.பன்றிகளை பிடிக்க விவசாயிகள் இணைந்து ஆட்களை நியமித்தும் ஒருசில பன்றிகளே பிடிபடுகின்றன. மற்றவைகள் தப்பி விடுகின்றன. பன்றிகளை பிடிக்க ஐந்தாயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது என்பதால் விவசாயிகள் திகைத்து வருகின்றனர். நரிகள் இருக்கும் இடத்தில் பன்றிகள் தொல்லை இருக்காது. பன்றிகள் குட்டி போட்ட உடன் அந்த வாசத்திற்கு நரிகள் சென்று பன்றிகுட்டிகளை சாப்பிட்டு விடும் என்பதால் விவசாயிகள் நரிகள் வளர்க்க யோசித்து வருகின்றனர். நரிகள் வளர்க்க வனத்துறை அனுமதி பெற வேண்டும் என்பதால் விவசாயிகள் திகைத்து வருகின்றனர். எனவே பன்றிகளை பிடித்து அழிக்க தமிழக அரசு உதவ வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.