நெற்பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் புதிய முயற்சி
திருப்புவனம்: திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நெற்பயிர்களை விவசாயிகள் பாட்டில்களால் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.திருப்புவனம் வட்டாரத்தில் வடகிழக்கு பருவ மழையை நம்பி நெல் நடவு பணிகள் நடப்பது வழக்கம், இந்தாண்டு வடகிழக்கு பருவமழை மிகவும் தாமதமாக பெய்ததால் தற்போது வரை நெல் நடவு பணிகள் நடந்து வருகின்றன. வைகை பாயும் திருப்புவனம் பகுதியில் மழை மற்றும் வைகை ஆற்று நீரை நம்பி நெல் விவசாயம் பத்தாயிரம் ஏக்கரில் நடந்து வருகிறது. கோ 50, கோ 51, என்.எல்.ஆர்., அட்சயா, ஆர்.என்.ஆர்., என பல்வேறு ரகங்கள் இப்பகுதியில் பயிரிடப்படுகிறது. கிணற்று பாசனத்தை நம்பி நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு தற்போது நெல் விளைச்சல் கண்டுள்ளது. நெற்பயிர்களை மயில், குருவி உள்ளிட்ட பறவை இனங்கள் சேதப்படுத்தி வருகின்றன. ஏக்கருக்கு 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில் அறுவடை காலத்தில் நெற்பயிர்கள் சேதமடைவதால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பறவைகளிடம் இருந்து நெற்பயிர்களை காப்பாற்ற பயிர்களை சுற்றிலும் சேலையால் வேலிஅமைத்தாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனையடுத்து விவசாயிகள் விளை நிலங்களைச் சுற்றிலும் கயிறு உள்ளிட்டவைகளால் வேலி அமைத்து அதில் பாட்டில்களை கட்டி தொங்க விட்டுள்ளனர்.பாட்டிலின் அருகே இரும்பு கம்பியையும் தொங்க விட்டிருப்பதால் காற்றில் அசையும் போது பாட்டிலில் உரசி சப்தம் எழுந்து பறவைகள் ஓடி விடுகின்றன. இதனால் விவசாயிகள் பலரும் நெற்பயிர்களை காப்பாற்ற வயல்களைச் சுற்றிலும் பாட்டிலால் தடுப்பு அமைத்து வருகின்றனர். இந்த முறை ஓரளவிற்கு பயனளித்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.