பறவையிடமிருந்து நெற்பயிரை காக்க வயலில் சேலை கட்டிய விவசாயிகள்
சிவகங்கை: நெற்கதிர்களை மயில்களிடம் இருந்து காக்கும் நோக்கில், கல்லல் அருகே எழுமாப்பட்டி விவசாயிகள் வயலை சுற்றி சேலையால் பாதுகாப்பு வேலி அமைத்துள்ளனர்.மாவட்டத்தில் பரவலாக மேலடுக்கு சுழற்சி, வடகிழக்கு பருவ மழை இயல்பை விட அதிகஅளவில் பெய்தது. இதனால் பாசன கண்மாய்கள்,நீர்நிலைகள் நிறைந்து கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சி அளிக்கின்றன. விவசாயிகள் 1.50 லட்சம் ஏக்கர் வரை நெல் நடவு செய்துள்ளனர். அக்., இறுதியில் நடவு செய்யும் விவசாயிகள் நெல்லை தை பொங்கலுக்கு பின் ஜன., 15 தேதிக்கு மேல் அறுவடை செய்ய துவங்குவர். தற்போது நெற்பயிர்கள் நன்கு விளைந்துள்ளன.இந்த பயிர்களை வயல்களுக்கு அருகே திரியும் புள்ளிமான், மாடு, மயில்களிடம் இருந்து பாதுகாக்க, விவசாயிகள் நெல் வயலை சுற்றி, சேலையை வேலியாக அமைத்து பயிர்களை காத்து வருகின்றனர்.கல்லல் அருகே எழுமாப்பட்டியில் நடவு செய்த நெல் நன்கு விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த நெல்லை இப்பகுதியில் வளரும் மயில்கள் சாப்பிட்டு வருகின்றன. அறுவடை வரை விளைந்த நெற்பயிர்களை பாதுகாக்கும் நோக்கில், விவசாயிகள் பழைய சேலைகளை கட்டி பாதுகாத்து வருகின்றனர்.