உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மடைகளை சீரமைக்காததால் விவசாயம் கேள்விக்குறி ; தேங்காத தண்ணீரால் விவசாயிகள் கவலை

மடைகளை சீரமைக்காததால் விவசாயம் கேள்விக்குறி ; தேங்காத தண்ணீரால் விவசாயிகள் கவலை

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் சீரமைக்கப்படாத உடைந்த மடைகளால் இந்தாண்டு விவசாயம் கேள்விக்குறி ஆகி வருவதாக விவசாயிகள் கவலையில் உள்ளனர். இத்தாலுகாவில் பொதுப்பணித்துறை, ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஜமீன் கண்மாய் நிர்வாகத்துக்கு உட்பட்ட 500க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கண்மாய்கள் உள்ளன. இதில் பல கண்மாய்களின் மடைகள் 20 முதல் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. அவை சீரமைக்கப்படாமல், மரங்களின் வேர் முளைத்து தண்ணீர் கசியும் நிலையில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்க விவசாயிகள் கடுமையாக போராட வேண்டியுள்ளது. கடந்தாண்டு பிரான்மலை உள்ளிட்ட சில கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டு விவசாயம் பாதிப்புக்கு உள்ளானது. ஆனால் அவை தற்காலிகமாக பூசப்பட்டதே தவிர முழுமையாக சீரமைக்கப்படவில்லை. தற்போது தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து, வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் பழைய மடைகளை சீரமைப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மடைகளை கண்டு கொள்ளாமல் விட்டால் இந்தாண்டு விவசாயம் கேள்விக்குறியாகி விடும் என்கிறார்கள் விவசாயிகள். கே.ஆர்.சதீஷ்குமார், அ.தி.மு.க., மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்; மாவட்டத்தில் பழமையான மடைகள் இன்னும் சீரமைக்கப்படாமல் தண்ணீர் கசியும் நிலையிலேயே பயிர்களுக்கு பாய்ச்சப்படுகிறது. வேங்கைப்பட்டி அருகே 80 ஏக்கர் பரப்பு கொண்ட புதுக்கண்மாய் மடைகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நிலையில் கடந்த டிச. 8ஆம் தேதி ஒரு மடையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது. 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பயிர்கள் மூழ்கின. பிறகு உடைப்பு தற்காலிகமாக அடைக்கப்பட்டது. தற்போது மடை அருகே மண் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் தண்ணீரை குழாய் மூலம் கொண்டு செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் தற்காலிக நடைமுறை தான். பெரிய அளவில் மழை பெய்து தண்ணீர் மட்டம் உயர்ந்தால் ஒட்டுமொத்த மடையும் அடித்துச் சென்று விடும். இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே மழைக்காலம் துவங்குவதற்கு முன்பாக புதுக்கண்மாய் மட்டுமின்றி, பழுதடைந்த அனைத்து கண்மாய்களுக்கும் அரசு நவீன முறையில் புதிதாக மடை கட்டித் தர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை