கண்மாய்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டதால் விவசாயிகள் கவலை
இத்தாலுகாவில் கடந்த சில வாரங்களாக பரவலாக பெய்த மழையால் சிங்கம்புணரி, காளாப்பூர், மட்டிக்கரைப்பட்டி, ஒடுவன்பட்டி, பிரான்மலை உள்ளிட்ட பகுதிகளில் கண்மாய்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சில கண்மாய்கள் மறுகாலும் பாய்ந்தன.ஆனால் எஸ்.புதுார் ஒன்றியத்தில் எஸ்.புதுார், கட்டுக்குடிப்பட்டி, உலகம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் கண்மாய்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.இதனால் இவ் ஒன்றியத்தில் பெரும்பாலான விவசாயிகள் இந்தாண்டு விவசாய பணியை துவக்காமல் உள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் இவ்வொன்றியத்தில் பரவலாக மழை பெய்தும் அவை கண்மாய்க்கு வந்து சேராமல் வீணாகி வருகிறது.மலைத்தொடர், மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் வரத்து கால்வாய்கள் பல இடங்களில் மண்மூடியும் சேதமடைந்தும் காணப்படுகிறது. சில இடங்களில் ஆக்கிரமிப்புகளால் கால்வாய்கள் இருந்த இடம் தெரியாமல் உள்ளது.மழைக்காலங்களில் கடல் போல் காட்சியளிக்கும் இக்கண்மாய்கள் தற்போது வறண்டு தரிசு நிலம் போல் உள்ளது. எனவே அடுத்து வரும் மழைக்கு முன்பாக அனைத்து வரத்துக் கால்வாய்களையும் சீரமைத்து கண் மாய்களுக்கு தண்ணீர் கொண்டு வர விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.எம்.இளையராஜா, பா.ஜ., ஒன்றிய துணை செயலாளர், எஸ்.புதுார்: மாவட்டத்தில் நெல் சாகுபடி மற்றும் தோட்ட பயிர்களுக்கு பெயர் பெற்ற இவ்வொன்றியத்தில் இந்த ஆண்டு கண்மாய்கள் வறண்டு காணப்படுவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். கடந்த சில வருடங்களாக பெய்யும் மழை நீர் கண்மாய்களுக்கு வந்து சேர்வதில் சிக்கல் உள்ளது. அனைத்து வரத்துக் கால்வாய்களையும் கண்டறிந்து சீர்படுத்தி தண்ணீரை வீணாக்காமல் கண்மாய்களில் தேக்கினால் விவசாயம் மீண்டும் உயிர் பெறும்.