உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் அடிக்கடி மின்தடை ‛காக்கா மீது பழிபோடும் அதிகாரிகள் 

சிவகங்கையில் அடிக்கடி மின்தடை ‛காக்கா மீது பழிபோடும் அதிகாரிகள் 

சிவகங்கை: மின்கம்பியில் 'காக்கா' உட்கார்ந்தாலே அடிக்கடி மின்தடை நிகழும் நிலைக்கு மாவட்ட தலைநகரான சிவகங்கை தள்ளப்பட்டுள்ளது. மாவட்ட தலைநகரான சிவகங்கையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அனைத்து துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. இங்கு மட்டுமின்றி குடியிருப்பு பகுதி, வணிக நிறுவனங்களுக்கு திருப்புத்துார் ரோட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின் சப்ளை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக எந்தவித முன்அறிவிப்பும் இன்றி தொண்டி ரோடு பகுதியில் உள்ள வீடு, அலுவலகங்களில் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை மின்தடை ஏற்பட்டு, மீண்டும் வருவதே வாடிக்கையாகி விட்டது. உரிய நேரத்தில் மின்சாரம் கிடைக்காமல் பலர் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால், நாங்கள் மின்சாரத்தை நிறுத்தவில்லை என சுலபமான பதிலை தந்து விடுகின்றனர். ஆனால், தொடர்ந்து பல நாட்களாக தொண்டி ரோட்டில் அடிக்கடி 30 நிமிடத்திற்கு ஒரு முறை மின்தடை ஏற்படுகிறது. மாவட்ட மின்வாரிய நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மின்வாரிய ஊழியர்கள் கூறியதாவது: சிவகங்கை மருத்துவ கல்லுாரி அருகே சிவகங்கை நகரில் சேகரமாகும் குப்பை, இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர். அவற்றை உண்பதற்காக நுாற்றுக்கணக்கான 'காக்கா'க்கள் வருகின்றன. அவை இறைச்சியை எடுத்து கொண்டு அரசு மருத்துவமனை டிரான்ஸ்பார்மருக்கு செல்லும் மின்கம்பியில் மொத்தமாக உட்காரும் போது, அடிக்கடி 'ஜம்பர்' கட்டாகி மின்வெட்டு நிகழ்கிறது என மழுப்பலான பதிலை தான் தருகின்றனர். மின்வெட்டுக்கு 'காக்கா' காரணமா, மின்வாரியம் காரணமா என அதிகாரிகள் தான் விளக்க வேண்டிய நிலை சிவகங்கையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ