நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் அரசு கட்டடங்கள்
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து அரசு கட்டடங்களை கட்டுவதால் ஆக்கிரமிப்பாளர்கள் குஷியாக உள்ளனர். இத்தாலுகாவில் சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஒன்றியங்களில் 500க்கும் மேற்பட்ட சிறிய பெரிய கண்மாய்கள், குளம் குட்டை உள்ளன. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் இப்பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தயங்குகின்றனர். நீர்நிலை புறம்போக்குகளில் அரசு கட்டடங்களை கட்டக்கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சில கண்மாய், குளங்களில் அரசுத் திட்டங்களான குளியல் தொட்டி, கதிரடிக்கும் களம், ரேஷன் கடை, சுகாதார வளாகம், வளம் மீட்பு பூங்கா ஆகியவற்றை அமைத்து வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் நீர்நிலைகளின் எண்ணிக்கை குறைந்து நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஒன்றியங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் அரசு திட்டங்களுக்கு வேறு புறம்போக்கு நிலங்களை தேர்வு செய்ய இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.