உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும்

அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும்

சிவகங்கை: தமிழக அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் உள்ள பணியிடங்களில் ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என அரசு டாக்டர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். டாக்டர்கள் கூறியது: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரியில் 11 புதிய மருத்துவக் கல்லுாரிகளிலும் 4 பழைய மருத்துவ கல்லுாரிகளில் இருந்து ஜூனியர் ரெசிடெண்ட் பதவியில் உள்ள மருத்துவர்கள் பணியிடங்களை ஆட்குறைப்பு செய்து புதிதாக திறக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு பணி நிரவல் செய்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. புதிதாக துவக்கப்படும் மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் பணியிடங்கள் பெரும்பாலான இடத்தில் உருவாக்கப்படவில்லை. வேலுார், துாத்துக்குடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனைகளை நிர்வகிப்பதற்கு எந்த ஒரு மருத்துவ பணியிடமோ செவிலியர் பணியிடமோ பணியாளர்கள் பணியிடமோ இதுவரை உருவாக்கப்படவில்லை. பழைய மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள், பணியாளர்கள் இங்கு பணி செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் 24 ஆயிரம் மருத்துவர்கள் இருக்க வேண்டிய பணியிடத்தில் 12 ஆயிரம் மருத்துவர்கள் மட்டுமே தற்போது பணியாற்றி வருகிறார்கள். குறைவான எண்ணிக்கையில் மருத்துவர்களை வைத்து அரசு மருத்துவ கல்லுாரிகள் நடத்தி வரும் நிலையில் மருத்துவர்கள் பணியிடங்களில் ஆட்குறைப்பு செய்வது தவறான செயலாகும். ஆட்குறைப்பு செய்யப்படும் மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதிக்கபடுவார்கள். தமிழக அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மருத்துவக் கல்லுாரிகளில் மருத்துவர் பணியிடங்களில் ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும். புதியதாக மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டால் அதற்குரிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்ட பின்னரே அந்த மருத்துவமனைகள் உருவாக்கபடவேண்டும் என அரசு டாக்டர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !