பாராக மாறிய அரசு அலுவலகம் காவலர் பாதுகாப்பு அவசியம்
திருப்புவனம்: திருப்புவனத்தில் அரசு அலுவலகங்களில் சுற்றுச்சுவர், சி.சி.டி.வி., கேமரா இல்லாததால் குடிமகன்கள் அதனை பாராக பயன்படுத்தி வருகின்றனர்.திருப்புவனம் புதுாரில் வட்டார வேளாண் அலுவலகம், விதை கிட்டங்கி, மழைமானி, தாசில்தார் குடியிருப்பு உள்ளிட்டவை ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. இந்த அலுவலகங்களில் 30க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். சமீபத்தில் கட்டப்பட்ட இந்த அரசு அலுவலகங்களுக்கு சுற்றுச்சுவர் கிடையாது, இரவு நேர காவலாளியும் இல்லை. அலுவலகங்களில் சி.சி.டி.வி., கேமராக்களும் பொருத்தப்படவில்லை.இரவு 7:00 மணி முதல் இந்த அலுவலக வராண்டாவில் குடிமகன்கள் பலரும் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது அருந்துகின்றனர். போதையில் இயற்கை உபாதைகளை கழிப்பது, மதுபாட்டில்களை உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். காலை அலுவலகம் வரும் ஊழியர்கள் இதனை சுத்தப்படுத்துவதே வேலையாக உள்ளதாக புலம்புகின்றனர். போலீசார் யாரும் இரவு நேர ரோந்து வருவதில்லை. இதனால் குடிமகன்கள் பலரும் தினசரி அலுவலக வராண்டாவை பாராக பயன்படுத்தி வருகின்றனர்.