உயர்கல்வித்துறை வளர்ச்சிக்கு கவர்னர் முட்டுக்கட்டை அமைச்சர் பேட்டி
காரைக்குடி:''தமிழகத்தில் உயர்கல்வித்துறை வளர்ச்சிக்கு கவர்னர் ரவி எவ்வளவோ முட்டுக்கட்டை போடுகிறார்,'' என, காரைக்குடி அழகப்பா பல்கலையில் நடந்த வீறுகவியரசர் முடியரசனார் பரிசளிப்பு மற்றும் நுால் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். இவ்விழாவில் அமைச்சர் பெரிய கருப்பன், அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி, மாங்குடி எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி, நுாலை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் வெளியிட்டார். பின் அவர் அளித்த பேட்டி: கவர்னர் பல்கலை வளர்ச்சிக்கு எவ்வளவு பங்கம் விளைவிக்கிறார் என பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரும் அறிந்ததே. பல்கலை துணைவேந்தர்களை நியமிக்கிற அதிகாரம் அந்தந்த மாநில முதல்வருக்கு உண்டு என்ற உரிமையை பெற்று தந்தவர் முதல்வர் ஸ்டாலின். ஆனாலும் அதை ஏற்றுக் கொள்ளாமல் காழ்ப்புணர்ச்சியால் தொடர்ந்து கவர்னர் தடை விதிக்கிறார். முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் அமைய வேண்டிய பல்கலைக்கு அனுமதி தராமல் ஜனாதிபதிக்கு அனுப்பி காலநீட்டிப்பு செய்கிறார். நீதிமன்ற உத்தரவு பெற்று விரைவில் கருணாநிதி பல்கலை அமைக்கப்படும் என முதல்வர் உறுதி அளித்திருக்கிறார். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 47 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் பல மாணவர்கள் உயர்கல்வி பயில்கின்றனர். அவர்களுக்கு கல்வி கட்டணம், போக்குவரத்து உள்ளிட்டவற்றை அரசே ஏற்று செய்வதால் உயர்கல்வி துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்றார்.