ரோட்டோர கடைகளில் வரி வசூல்; நெடுஞ்சாலைத்துறை எதிர்ப்பு
திருப்புவனம்; திருப்புவனத்தில் ரோட்டை ஆக்கிரமித்துஉள்ள கடைகளில் பேரூராட்சி நிர்வாகம் வரி வசூலிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.திருப்புவனத்தில் ரோட்டை ஆக்கிரமித்து பலரும் தேங்காய், பூ, பழம், காய்கறி, கீரை உள்ளிட்டவைகளை விற்பனை செய்து வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் வைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நகர்பகுதிகளை கனரக வாகனங்கள் கடக்கவே முடியவில்லை. திருப்புவனத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் ரோட்டை ஆக்கிரமிக்கா வண்ணம் சென்டர் மீடியன் அமைப்பது உள்ளிட்டவற்றை நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ரோட்டோர கடைகளை அகற்ற முயன்றால் பேரூராட்சிக்கு தினசரி வரி செலுத்துகிறோம் என வியாபாரிகள் அதிகாரிகளிடம் தகராறு செய்கின்றனர். இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளவர்களிடம் வரி வசூலிக்கக்கூடாது, அவற்றை அப்புறப்படுத்தநடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.