உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் முழுமையடையாத சர்வீஸ் ரோடு பணி: வாகன ஓட்டிகள் அச்சம்

திருப்புவனத்தில் முழுமையடையாத சர்வீஸ் ரோடு பணி: வாகன ஓட்டிகள் அச்சம்

திருப்புவனம்; மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலான நான்கு வழிச்சாலையில் சர்வீஸ் ரோடு பணியை முழுமையாக அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு 2017 முதல் வாகனப்போக்குவரத்து நடந்து வருகிறது. முக்கிய நகரங்களில் சர்வீஸ் ரோடு, பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளன. மணலுாரில் இருந்து கழுகேர்கடை வரை சர்வீஸ் ரோடு அமைக்கப்படும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது. சிலைமானில் இருந்து சர்வீஸ் ரோடு வழியாக மணலுார் வரும் டவுன் பஸ்கள் மீண்டும் நான்கு வழிச்சாலைக்கு வந்து மறுபடியும் சர்வீஸ் ரோடு வழியாக கழுகேர்கடை செல்கின்றன. இடையில் 100 மீட்டர் தூரத்தில் 50 மீட்டர் துாரத்திற்கு மட்டும் சாலை அமைக்கப்படாமல் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. கழுகேர்கடையில் இருந்து வருபவர்கள் சக்குடி விலக்கு சென்று தான் மீண்டும் திருப்புவனம் திரும்ப வேண்டும். இரண்டு கி.மீ., தூரம் செல்வதற்கு பதிலாக ராங் ரூட்டில் எதிர் திசையில் தினசரி ஏராளமானவர்கள் திருப்புவனம் வருகின்றனர். இதனால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் நிகழ்ந்து வருகிறது. திருப்புவனம் பைபாஸ் ரோட்டில் விடுபட்ட சர்வீஸ் ரோடு பணிகள் தட்டான்குளம் வரை நடந்து வருகிறது. இதனை கழுகேர்கடை வரை நீட்டித்தால் ராங்ரூட் பிரச்னையும் முடிவிற்கு வரும் விபத்தும் தவிர்க்கப்படும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் குறைந்த தூரத்திற்கு மட்டும் சர்வீஸ் ரோடு அமைப்பதால் விபத்து நேரிடவே வாய்ப்பு உண்டு. எனவே திருப்புவனம் மின்வாரிய அலுவலகம் அருகே அமைக்கப்படும் சர்வீஸ் ரோட்டை கழுகேர்கடை வரை நீட்டிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !