திருப்புவனத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு ; போக்குவரத்து நெரிசலில் தவிப்பு
திருப்புவனம்: திருப்புவனம் பேரூராட்சியில் 18 வார்டுகளில் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்நகர் வழியாக மதுரை, பரமக்குடி, ராமேஸ்வரத்திற்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு ரோட்டின் இருபுறமும் ஓட்டல், டீ, மளிகை, பூக்கடைகள் வைத்துள்ளனர்.ஓட்டல் முன் ரோட்டை ஆக்கிரமித்து அடுப்புகள் வைத்துள்ளனர். கடைக்கு முன் தெருவோர கடைகள் வைக்க அனுமதிக்கின்றனர். இங்கு 7.5 மீட்டர் அகலத்தில் ரோடு இருக்க வேண்டும். ஆனால், கடைகள் ஆக்கிரமிப்பால் இங்கு 3.5 மீட்டர் மட்டுமே ரோடு உள்ளன. இந்தரோட்டில் தான் அனைத்து வாகனங்களும் கூட்ட நெரிசலில் சென்று வருகின்றன. கடந்த 10 ஆண்டாக திருப்புவனத்தில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவே இல்லை.இதையடுத்து திருப்புவனம் தாசில்தார் (பொறுப்பு) ரமேஷ் தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.பொதுப்பணி, நெடுஞ்சாலை, பேரூராட்சி நிர்வாகம், வர்த்தக சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். மே 10 ம் தேதிக்குள் ஆக்கிரமிப்பை கடைக்காரர்களே அகற்றிக்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ரோட்டில் திரியும் மாடுகளை அப்புறப்படுத்தி, ஆக்கிரமிப்பை அகற்றலாம் என வர்த்தகர்கள் தெரிவித்தனர். அப்போது ஆக்கிரமிப்பு அகற்றும் தேதியை மாற்ற முடியாது. எனவே வர்த்தகர்கள் தாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுங்கள் என தெரிவித்தனர்.ஆக்கிரமிப்பால் ஊருக்குள் பஸ்கள் வராமல் பைபாஸ் ரோட்டில் நேரடியாக சென்று விடுவதாகவும் தெரிவித்தனர். கடந்த 2 ஆண்டுக்கு முன்பே ஆக்கிரமிப்பு கட்டடங்களை அளவீடு செய்த நிலையில், அவற்றை அகற்றுவதில் அதிகாரிகள் அக்கறை காட்டாமல் இருப்பது நெரிசலை மேலும் அதிகரிக்க செய்கிறது.திருப்புவனத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை அகற்றி கொள்ள அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களிடம் கெஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.