சென்னை ரயில்களில் கூட்டம் அதிகரிப்பு
மானாமதுரை: மானாமதுரை,இளையான்குடி பகுதியை சேர்ந்த ரயில் பயணிகள் ஆயுத பூஜை விடுமுறை முடிந்து சென்னை செல்வதற்கு ரயில்களில் கூட்டம் அலைமோதியதால் பயணிகள் மிகுந்த அவதிப்பட்டனர். ராமேஸ்வரத்தில் இருந்து மானாமதுரை வழியாக சென்னைக்கு தினசரி 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்று வருகின்றன. ஆயுத பூஜை விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் இரவு சென்னை செல்வதற்காக மானாமதுரை, இளையான்குடி,ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர், விருதுநகர் மாவட்டம் வீரசோழன்,நரிக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர் களைச் சேர்ந்த ஏராளமான பயணிகள் மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து காத்திருந்தனர். ஆனால் இவ்வழியாக சென்ற 3 எக்ஸ்பிரஸ் ரயில்களிலும், சிலம்பு எக்ஸ்பிரஸ், அயோத்தி செல்லும் ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் நிற்க கூட இடமில்லாமல் இருந்ததினால் பயணிகள் ரயில்களில் ஏற முடியாமல் மிகுந்த அவதிப்பட்டனர். சிறப்பு ரயில்கள் அவசியம் இது குறித்து ரயில் பயணிகள் கூறியதாவது: விடுமுறை, பண்டிகை கால நாட்களில் ராமேஸ்வரம் மார்க்கத்தில் மானாமதுரை வழியாக முன்பதி வில்லா சிறப்பு ரயில்கள் விடாமல் இருப்பதினால் இது போன்ற நிலைமை ஏற்பட்டு வருகிறது. ஆகவே தீபாவளி பண் டிகைக்கு சென்னை மற்றும் கோயம்புத்துாரில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்றனர்.