விளை நிலமாக்க மானியம் வேளாண் இணை இயக்குனர் தகவல்
சிவகங்கை: ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை,விளைநிலமாக மாற்ற மானியம் வழங்கப்படுகிறது என வேளாண் இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, இத்திட்டத்தில் தரிசு நில தொகுப்பு, தனிநபர் தரிசு நில மேம்பாடு, தெளிப்பான், வரப்பில் பயறு, உயிர் உரங்கள் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது.இம்மாவட்டத்தில் 86 கிராமங்கள் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 10 முதல் 15 ஏக்கர் வரை தொடர்ச்சியாக நீண்ட கால தரிசு நிலங்களை தெரிவு செய்து முட்புதர்களை அகற்றி, சமன் செய்து அங்கு பலன் தரும் பழ மரக்கன்றுக் நட மானியம் வழங்கப்படும்.ஆழ்குழாய் கிணறு, மின் இணைப்பு செலவை அரசே ஏற்கும். சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படும். மொத்தமாக தரிசு நிலங்கள் இல்லாத இடங்களில் தனி நபர் நிலங்களில் முட்புதர் அகற்றி, உழவு செய்து சாகுபடிக்கு கொண்டு வர எக்டேருக்கு ரூ.9,600 மானியம் வழங்கப்படும்.தரிசு நிலங்களை மேம்படுத்திய பின் மத்திய, மாநில அரசு மானியங்களில் சிறுதானியம், பயறு வகை, எண்ணெய் வித்து பயிர் சாகுபடி செய்ய வேண்டும். தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெற அந்தந்த பகுதி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம், என்றார்.