உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை மாவட்டத்தில் 1364 ஓட்டுச்சாவடிகளில் தீவிர வாக்காளர் திருத்த பணி துவங்கியது

சிவகங்கை மாவட்டத்தில் 1364 ஓட்டுச்சாவடிகளில் தீவிர வாக்காளர் திருத்த பணி துவங்கியது

சிவகங்கை: மாவட்ட அளவில் 4 சட்டசபை தொகுதிகளில் வாக்காளர்களின் உறுதி தன்மையை அறிய தீவிர வாக்காளர் திருத்த பணி நேற்று 1364 ஓட்டுச்சாவடிகளுக்கு உட்பட்ட பகுதியில் துவக்கியுள்ளது. சிவகங்கை மாவட்ட அளவில் சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை (தனி) தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் 1,364 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இந்த ஓட்டுச்சாவடிகள் மூலம் 12 லட்சத்து 29 ஆயிரத்து 93 வாக்காளர்கள் ஓட்டளித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் கமிஷன் நவ., 4 முதல் டிச., 4 வரை வீடு தோறும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் சென்று, தீவிர வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. ஓட்டுச்சாவடிக்கு ஒரு அலுவலர் வீதம் ஆசிரியர், வி.ஏ.ஓ., தலையாரி, அங்கன்வாடி ஊழியர்கள், நகராட்சி டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் என 1,364 பேர் வரை ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வீடு தோறும் சென்று தீவிர வாக்காளர் திருத்த பணிக்கான விண்ணப்பத்தை வழங்கி, அவற்றை வாக்காளரிடம் பூர்த்தி செய்து பெற்று, அலைபேசியில் உள்ள 'ஆப்' மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவை அப்படியே டில்லி தேர்தல் கமிஷன் செயலிக்கு சென்றுவிடும். இந்த விண்ணப்பத்தில் 2002ல் வாக்காளரின் பதிவு எண், இருப்பிடம் உள்ளிட்ட விபரங்களை சேகரிக்கின்றனர். அத்துடன், அடுத்த கட்டத்தில் 2025ம் நாளான்று வாக்காளரின் பதிவு எண், பெயர், விலாசம், ஓட்டுச்சாவடி பதிவு எண் உள்ளிட்டவற்றை எழுதி அந்த விண்ணப்பத்தில், புதிய போட்டோ ஒன்றும் ஒட்டி விடுகின்றனர். பின்னர் அந்த விண்ணப்பத்தில் வாக்காளரிடம் ஒப்புதல் கையெழுத்து பெற்று, அவற்றை அலைபேசி 'ஆப்' மூலம் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பதிவேற்றம் செய்து விடுகின்றனர். தொடர்ந்து ஒவ்வொரு ஓட்டுச்சாவடி அலுவலரும் ஒரு மாதத்திற்குள் 3 முறை வாக்காளர் வீடுகளுக்கு விடுபடாமல் சென்று, வாக்காளர்கள் இருப்பு பற்றிய உறுதியை ஏற்படுத்தவேண்டும். இந்த பணியில் அந்தந்த ஓட்டுச்சாவடி அலுவலருடன், கட்சிகளின் ஓட்டுச்சாவடி பொறுப்பாளரும் சென்று முழுமையான விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் இக்கணக்கெடுப்பின் போது, வாக்காளர்கள் மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனம் வழங்கிய நிரந்தர ஊழியர், ஓய்வூதியருக்கான அடையாள அட்டை. 1987ம் ஆண்டு ஜன.,1க்கு முன் வழங்கப்பட்ட மத்திய, மாநில அரசு வழங்கிய அடையாள அட்டை. பிறப்பு சான்று, பாஸ்போர்ட், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவன கல்வி சான்று, நிரந்தர வசிப்பிட சான்று, வன உரிமைச் சான்று, ஜாதிச்சான்று, தேசிய குடிமக்கள் பதிவேடு, குடும்ப பதிவேடு, அரசு வழங்கிய நிலம், வீடு ஒதுக்கீடு சான்று, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ