உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திறப்பு விழா நடத்தி ஏழு மாதமாகிவிட்டது: ஆரம்ப சுகாதார நிலைய முழு செயல்பாடு எப்போது

திறப்பு விழா நடத்தி ஏழு மாதமாகிவிட்டது: ஆரம்ப சுகாதார நிலைய முழு செயல்பாடு எப்போது

தேவகோட்டை அருகே 15 கி.மீ. தொலைவில் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முக்கியமான ஊர் புளியால். இதனைச் சுற்றி 60 கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். பல ஆண்டுகளாக விபத்து ஏற்படும் பகுதி. மேலும் இங்குள்ளவர்கள் நோய்க்கு சிகிச்சை பெற 15 கி.மீ., துாரமுள்ள தேவகோட்டைக்கு தான் வர வேண்டும்.புளியாலில் மருத்துவமனை அவசியம் என தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இந்த நிலையில் கடந்த அ.தி. மு. க. ஆட்சியில் அம்மா மினி கிளினிக் ஊராட்சி அலுவலகம் அருகில் அமைக்கப்பட்டது. டாக்டர், நர்சுகள் பணி புரிந்து வந்தனர். கிராம மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் அம்மா மினி கிளினிக்குகளுக்கு மூடு விழா கண்டதில் புளியால் கிளினிக்கும் ஒன்று. ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்தது. தேவகோட்டை ஒன்றியத்திலேயே பெரிய ஊராட்சியான புளியாலில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாமல் இருந்தது. இந்த சூழ்நிலையில் மத்திய நிதிக் குழுவின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 2021-=22 ம் ஆண்டு புளியாலில் ரூ 30 லட்சம் செலவில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. புளியால் மெயின் ரோட்டில் கட்டடம் கட்டினர். இரண்டு ஆண்டு கழித்து 2024 ஆம் ஆண்டு ஜூலை 30 ந்தேதி காரைக்குடியில் காணொளி மூலம் தேவகோட்டை, புளியால் உட்பட 11 சுகாதார நிலையங்களை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். ஏழு மாதமாகியும் சுகாதார நிலையம் முழு செயல்பாட்டுக்கு வரவில்லை. ஒரு வாரமாகத்தான் பொருட்கள் வருகிறது. ஆனால் மக்கள் சிகிக்சைக்கு பழைய இடத்திற்கே செல்கின்றனர்.

பழைய நிலையில் சிகிச்சை

கிராம சுகாதார செவிலியர்கள் ஊராட்சி கட்டடம் அருகே கர்ப்பிணி பெண்களுக்கு ஊசி போடுவது, மருந்து வழங்கி வருகின்றனர். கட்டட பணி முடிந்தாலும் பொருட்கள் வழங்கப்படவில்லை. ஒரு சில தினங்களுக்கு முன் தான் இன்டர்நெட் இணைப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இன்னும் முழு அளவில் செயல்படவில்லை. புளியால் துணை சுகாதார நிலையத்திற்கு டாக்டர் உட்பட செவிலியர்கள், அனைத்து பணியாளர்களையும் முழு அளவில் நியமித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை