விதை வீரியம், முளைப்புத்திறன் விவசாயிகள் அறிவது அவசியம் துணை இயக்குனர் தகவல்
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் எம்.இப்ராம்சா கூறியதாவது: மாவட்டத்தில் மானாவாரியாக நெல் சாகுபடி செய்து வருகின்றனர். நேரடி புழுதி நெல் விதைப்பிற்கு பயன்படுத்தப்படும் நெல் ரகங்கள் அந்தந்த பகுதிக்கு ஏற்றதா என விவசாயிகள் நிபுணர்கள், வேளாண் அலுவலரிடம் ஆலோசித்து தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்த ரகத்தின் விதைகள் வீரியம், முளைப்புத்திறன் மிக்கதாக இருக்க வேண்டும். முளைப்புத்திறன், புறந்துாய்மை உள்ளிட்ட காரணிகளை உற்பத்தியாளர், விற்பனையாளர், விதை சான்று துறை, உயிர்ம சான்று துறை விதை ஆய்வாளர்கள் மாதிரிகளை ஒவ்வொரு நிலையிலும் பரிசோதனை மூலம் உறுதிபடுத்துகின்றனர். விவசாயிகள் ஒரு கையளவு விதையினை ஈரப்பதமான துணிப்பை அல்லது சிறிய சணல் சாக்கில் போட்டு கட்ட வேண்டும். 12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து எடுத்து இன்னொரு ஈரமான சாக்கினை பயன்படுத்தி மூட வேண்டும். இருட்டான சற்று வெப்பமான இடத்தில் 24 மணி நேரம் வைக்க வேண்டும். அடுத்த நாள் முளைப்பு வந்த விதைகளை எண்ணி, எவ்வளவு சதவீதம் முளைப்புத்திறன் என தோராயமாக அறியலாம். 80 சதவீதத்திற்கு அதிகமாக முளைப்புத்திறன் இருக்க வேண்டும் என்றார்.