உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி பெண் நகைக்காக அடித்துக்கொலை: உரிய விசாரணை நடத்த உறவினர்கள் மறியல் கைதானவரை தாக்கவும் முயற்சி

காரைக்குடி பெண் நகைக்காக அடித்துக்கொலை: உரிய விசாரணை நடத்த உறவினர்கள் மறியல் கைதானவரை தாக்கவும் முயற்சி

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காரில் மர்மமான முறையில் மகேஷ்வரி 38, இறந்து கிடந்த சம்பவத்தில் நகைக்காக அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதில் ஈடுபட்ட சசிகுமாரை 33, போலீசார் கைது செய்தனர். ஆனால் உரிய விசாரணை நடத்தி முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய கோரி மகேஷ்வரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். மேலும் சசிகுமாரை தாக்கவும் முயன்றனர். காரைக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் பாண்டிகுமார் மனைவி மகேஷ்வரி 38. இவர் நேற்று முன் தினம் ஆவுடைபொய்கை அருகே காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போலீசார் தலையில் காயத்துடன் இருந்த மகேஷ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மகேஷ்வரியின் தந்தை நாச்சியப்பன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்தனர். டி.எஸ்.பி., கவுதம் உத்தரவின்படி தனிப்படையும் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். கல்லால் அடித்து கொலை அப்பகுதியிலிருந்த சி.சி.டிவி., காட்சிகளின் அடிப்படையில் மகேஷ்வரிக்கு டிரைவிங் கற்றுக் கொடுத்த காரைக்குடி லட்சுமிநகர் வேலுச்சாமி மகன் சசிகுமார் 33, அவரை வீட்டுமனைகளை காட்ட காரில் அழைத்து சென்றது தெரிய வந்தது. சசிகுமாரை விசாரித்த போது, மகேஷ்வரியை கல்லால் அடித்து கொலை செய்ததுடன் கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் செயினை திருடிச் சென்று நண்பரிடம் கொடுத்து அடகு வைத்து ரூ.3 லட்சம் பெற்றதும் தெரிய வந்தது. சசிகுமாரை போலீசார் கைது செய்து செயின், பணத்தை மீட்டனர். உறவினர்கள் தாக்குதல் சசிகுமாரை நேற்று மதியம் குன்றக்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீசார் அழைத்து வந்தனர். அங்கு நின்ற மகேஸ்வரியின் உறவினர்கள் சசிகுமாரை தாக்கமுயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து சசிகுமாரை உள்ளே அழைத்து சென்று ஸ்டேஷனை பூட்டினர். மறியல் சசிகுமார் முக்கிய குற்றவாளி இல்லை. இதில் சம்பந்தப்பட்ட மற்றொரு நபரை கைது செய்ய வேண்டும் என மகேஷ்வரியின் உறவினர்கள் அரசு மருத்துவமனை அருகே திருச்சி-ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். மருத்துவமனையில் சோகம் மகேஷ்வரியை கொலை செய்த சசிகுமார் அங்கிருந்து தப்பி வேலங்குடி அருகே உள்ள கண்மாயில் குளித்து விட்டு அருகே தோட்டம் ஒன்றில் காய்ந்து கொண்டிருந்த துணியை எடுத்து மாற்றிக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு மகேஷ்வரி இறந்தது குறித்து சோகத்துடன் விசாரித்திருக்கிறார். புறா கூண்டில் நகைகள் போலீசார் கூறியதாவது: மகேஷ்வரி வீட்டிலிருந்து காரில் புறப்பட்டது முதல் சம்பவ இடம் வரை இருந்த 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். அவரது அலைபேசியில் இருந்த எண்களை தொடர்பு கொண்டு விசாரித்தோம். இதில் சசிகுமார் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். உறுதி செய்ய அவரது வீட்டிற்கு சென்ற போது புறா கூண்டில் நகைகளை மறைத்து வைத்திருந்தார். மீதி நகைகளை பைனான்ஸ் ஒன்றில் அடகு வைத்திருந்தார். சசிகுமார் தெரிந்தவர்களிடம் பணம் வாங்கி மகேஷ்வரியிடம் கொடுத்துள்ளார். பல முறை பணத்தை திரும்ப கேட்டும் மகேஷ்வரி கொடுக்கவில்லை. சசிகுமாருக்கு நெருக்கடி அதிகமானதால் நகைக்காக கொலையில் ஈடுபட்டுள்ளார். மகேஷ்வரியிடம் டிரைவராக சசிகுமார் அறிமுகமாகி டிரைவிங் கற்றுக் கொடுத்துள்ளார் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை