கீழடி அருங்காட்சியக பணி மின்கம்பிகள் மாற்றுவதில் சிக்கல்
கீழடி கீழடி திறந்த வெளி அருங்காட்சியக கட்டட பணிகளுக்காக மின்கம்பிகள் இடமாற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கீழடியில் தமிழக அரசு 4.5 ஏக்கர் நிலத்தை 16 விவசாயிகளிடம் பெற்று, இழப்பீடு வழங்கி, தொல்லியல் ஆய்வு நடத்தினர். இங்கு 5,914 சதுர மீட்டர் பரப்பளவில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைய உள்ளது. கடந்த ஜனவரியில் 17 கோடியே 80 லட்ச ரூபாய் செலவிலான திறந்த வெளி அருங்காட்சியக பணிகள் தொடங்கப்பட்டன. அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களை வெளியே எடுக்கும் பணி முடிவடைந்துள்ள நிலையில் திறந்த வெளி அருங்காட்சியக கட்டடப்பணிகளை தொடங்க உள்ளன. அருங்காட்சியகம் அமைய உள்ள இடம் வழியாக திருப்புவனம் நெல்முடிகரை துணை மின் நிலையத்தில் இருந்து பொட்டப்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உயர் மின் அழுத்த கம்பிகள் உள்ளன. இதனை இடமாற்றம் செய்தால் தான் கட்டடப்பணிகளை தொடங்க முடியும். ஆனால் மின்கம்பிகளை அகற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது, திறந்த வெளி அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தின் தெற்கு பகுதியில் தொல்லியல் துறை கையகப்படுத்தப்பட்ட இடம் வழியாக மின்கம்பிகளை மாற்றியமைக்கலாம். ஆனால் அந்த இடத்தில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன. அவற்றை தொல்லியல் துறை அதிகாரிகள் அகற்றி தரவோ, வடக்கு பகுதியில் பட்டா நிலங்கள் வழியாக கொண்டு சென்றால் அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும். இதற்கான பணிகளை தொல்லியல் துறை செய்யாததால், மின் கம்பிகளை இடமாற்றம் செய்ய முடியாத நிலை உள்ளது என்றனர்.