தென்னையில் கேரளா வாடல் நோய்
திருப்பாச்சேத்தி: தினமலர் நாளிதழில் தென்னை மரங்களில் கேரளா வாடல் நோய் தாக்கம் அதிகரித்திருப்பதாக செய்தி வந்ததைதயடுத்து நேற்று தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நோய் பாதித்த தென்னை மரங்களை ஆய்வு செய்தனர். தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஷர்மிளா கூறியதாவது: திருப்பாச்சேத்தி பகுதியில் தென்னை மரங்களில் பென்சில் முனை நோய் மற்றும் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. வெள்ளை ஈ க்களை கட்டுப்படுத்த தென்னை மட்டைகளை நோக்கி அதிவேகத்தில் தண்ணீரை பீய்ச்சியடிக்க வேண்டும். மஞ்சள் நிற பாலிதீன் பேப்பர்கள் மீது விளக்கெண்ணை தடவி மரங்களில் 6 அடி உயரத்தில் தொங்க விட வேண்டும். தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் எக்டேருக்கு 20 மஞ்சள் ஒட்டும் பொறி, ஆயிரம் முட்டை ஒட்டுண்ணி அட்டைகள் வழங்கப்படுகிறது. பென்சில் முனை நோயை கட்டுப்படுத்த வேர்ப்பகுதியில் தென்னை டானிக்கை செலுத்த வேண்டும். அப்போதுதான் வேர்ப் பகுதியில் இருந்து நேரடியாக மரத்திற்கு சென்று பயனளிக்கும். தோட்டக்கலைத்துறை மூலம் தென்னை டானிக் மான்ய விலையில் வழங்கப்படுகிறது. விவசாயிகள் நேரில் அணுகி பெற்று கொள்ளலாம் என்றார்.