உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வெயிலின் தாக்கத்தால் உதிரும் குரும்பை: திருப்புவனத்தில் மீண்டும் தேங்காய் விலை உயர்கிறது

வெயிலின் தாக்கத்தால் உதிரும் குரும்பை: திருப்புவனத்தில் மீண்டும் தேங்காய் விலை உயர்கிறது

சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, லாடனேந்தல், மடப்புரம், கானுார் உள்ளிட்ட வைகை ஆற்றுப்படுகையை ஒட்டிய பகுதிகளில் ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் உள்ளன.வைகை ஆற்றில் நீர் வரத்து இல்லாவிட்டாலும் பம்ப்செட் மூலம் தென்னை மரங்களை விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர். தென்னை மரங்களில் இருந்து 60 நாட்களுக்கு ஒரு முறை தேங்காய் பறிப்பு நடைபெறும்.ஒரு மரத்திற்கு 15 முதல் 20 தேங்காய் வரை கிடைக்கும், வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும், இதனால் மரங்களில் இருந்து பூக்கள், குரும்பை உதிர்வது வழக்கம், ஆனால் செப்டம்பரில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழலில் ஆகஸ்டிலேயே பூக்கள் பூக்க தொடங்கி விடும். ஆனால் இந்தாண்டு செப்டம்பர் மாதம் முடிவடைய உள்ள நிலையில் இன்னமும் மழை தொடங்காததுடன் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.20 நாட்களுக்கும் மேலாக 100 டிகிரியில் வெயில் இருப்பதால் தென்னை மரங்களில் இருந்து பூக்கள், குரும்பைகள் உதிர்ந்து வருகின்றன. இதே நிலை தொடரும் பட்சத்தில் தேங்காய் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளது. திருப்புவனம் பகுதியில் இருந்து உத்தரப்பிரதேசம், உத்தர காண்ட், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு தேங்காய் விற்பனைக்கு அனுப்ப படுகின்றன.ஆகஸ்டில் கிலோ 30 ரூபாய் என இருந்த நிலையில் இம்மாதம் 35 ஆக உயர்ந்துள்ளது. விரைவில் கிலோ 50 ருபாயாக உயரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஒரு மரத்திற்கு 20 காய்கள் அறுவடை செய்த நிலையில் தற்போது ஐந்து காய்கள் வரையே கிடைத்து வருகின்றன. தீபாவளி வர உள்ள நிலையில் தேங்காய் விலை உயர்வு பொதுமக்களை கடுமையாக பாதித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை