திருப்பாச்சேத்தியில் மோட்டார் பழுது தவிக்கும் கூலி தொழிலாளர்கள்
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தியில் மோட்டார் பழுது காரணமாக குளியல் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படாததால் கூலி தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். திருப்பாச்சேத்தி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கூலி தொழிலாளர்கள் அதிகம், வாழை இலை, காய், பழம் அறுவடை, நெற்பயிர்களுக்கு களை எடுத்தல், உள்ளிட்ட பணிகளுக்கு ஏராளமான கூலி தொழிலாளர்கள் திருப்பாச்சேத்தி வந்து செல்வார்கள், திருப்பாச்சேத்தியில் பத்திற்கும் மேற்பட்ட அரிவாள் பட்டறைகள் உள்ளன. இதிலும் கூலி தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றுகின்றனர். மாலை நேரத்தில் கூலி தொழிலாளர்கள் பணி முடிந்து திருப்பாச்சேத்தி போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள குளியல் தொட்டியில் குளிப்பதற்கு வசதியாக 2022 - 23ல் நான்கரை லட்ச ரூபாய் செலவில் ஆழ்துளை கிணறு, குளியல் தொட்டி அமைக்கப்பட்டது. கூலி வேலைக்கு சென்று வரும் ஆண்களும், பெண்களும் தொட்டியில் குளித்து விட்டு செல்வார்கள். கடந்த நான்கு மாதங்களுக்கு முன் ஆழ்துளை கிணறு மோட்டார் பழுதாகி விட்டதால் தொட்டியில் தண்ணீர் நிரப்படவில்லை. இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் இன்று வரை சரி செய்யப்படவில்லை. எனவே குளிப்பதற்கு இடமின்றி கூலி தொழிலாளர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் பழுதடைந்த மோட்டாரை சரி செய்து குளியல் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.