காரைக்குடி சட்டக்கல்லுாரி அருகே சார்பு நீதிமன்றத்திற்கு இடம் தேர்வு
காரைக்குடி : காரைக்குடியில் புதிய சார்பு நீதிமன்றம் கட்டுவதற்கான 7.58 ஏக்கர் நிலத்தை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பூர்ணிமா, சமீம் அகமது ஆகியோர் திருச்சி பைபாஸ்ரோட்டில் சட்டக்கல்லுாரி அருகே இடத்தை தேர்வு செய்துள்ளனர். காரைக்குடியில் மாவட்ட உரிமையியல், குற்றவியல் நடுவர், விரைவு நீதிமன்றங்கள் செயல்படுகிறது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால், இங்கு மாவட்ட மற்றும் சார்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என வழக்கறிஞர் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைத்து வந்தனர். இதற்கான இடத்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தேர்வு செய்துள்ளனர். இடத்தை பார்வையிட்ட நீதிபதிகள் அரசு சட்ட கல்லுாரியிலும் ஆய்வு செய்து, ஆலோசனை கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில் நீதிபதிகள், தேவகோட்டை சப்- கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ், உதவி எஸ்.பி., ஆஷிஷ் புனியா, தாசில்தார் ராஜா, அரசு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.