கலப்படத்தை கண்டறிய பால்மானி கூட்டுறவு சங்கம் நடவடிக்கை
திருப்புவனம்; திருப்புவனம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பாலில் தண்ணீர் கலப்பதை கண்டறிய நவீன பால்மானி பொருத்தப்பட்டுள்ளது. திருப்புவனம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். மணல்மேடு, பெத்தானேந்தல், செல்லப்பனேந்தல் உள்ளிட்ட பல கிராமங்களில் சங்க உறுப்பினர்களிடம் பால் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளுர் தேவை போக காரைக்குடி ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பப்படுகிறது. கிராமங்களில் இருந்து கொண்டு வரப்படும் பாலில் தண்ணீர் கலக்கப்பட்டுள்ளதா என பால்மானி வைத்து சோதனை செய்வது வழக்கம். ஒரு கேன் பால் இருந்து சாம்பிள் எடுத்து சோதனை செய்ய குறைந்த பட்சம் 30 நிமிடம் ஆகும். அனைத்து கேன்களிலும் ஆய்வு செய்ய காலதாமதமானது. இதனை தவிர்க்க திருப்புவனம் கோட்டை கூட்டுறவு சங்க விற்பனை நிலையத்தில் நவீன பால்மானி பொருத்தப்பட்டுள்ளது. ஐந்து நிமிடத்தில் பாலில் உள்ள தண்ணீரின் அளவை தானியங்கி இயந்திரம் மூலம் அறிந்து கொள்ளலாம், பாலில் 20 சதவிகிதத்திற்கும் மேல் தண்ணீர் இருந்தால் அந்த பாலை கொள்முதல் செய்யப்படாமல் திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதன் மூலம் காரைக்குடி ஆவினுக்கு சுத்தமான பால் விற்பனைக்கு அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.