தீவிர சிகிச்சை பிரிவு கட்டடப்பணி ஆய்வு செய்த அமைச்சர் அதிருப்தி பெயின்ட் கலரை மாற்ற உத்தரவு
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் புதிதாக கட்டப்படும் கட்டடப்பணியை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தின் 'பினிஷிங்,' சரியில்லை என்றும் கட்டடத்திற்கு வர்ணம் பூசும் முன்பு தன்னிடம் பெயின்ட் கலரை காண்பித்து விட்டு பூச வேண்டும் என்று உத்தரவிட்டார்.சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ரூ.11.74 கோடி செலவில் 50 படுக்கையுடன் கூடிய ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு கட்டடம் கட்டப்பட்டு பணி முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.23.75 கோடி மதிப்பில் 50 படுக்கையுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டட கட்டுமானப்பணியும் முடிந்துள்ளது. இந்த இரண்டு கட்டடத்தையும் அமைச்சர்கள் எ.வ.வேலு, பெரியகருப்பன், கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது பொதுப்பணித்துறை அமைச்சர் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு கட்டடம் குறித்து கலெக்டரிடம் கேட்டறிந்தார். கலெக்டர் அதற்கு கட்டடத்திற்கு டி.டி.சி.பி., அப்ரூவல் இன்னும் கிடைக்கவில்லை என்றும் அப்ரூவல் கிடைத்தவுடன் கட்டடம் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்றார்.பின்னர் மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவை ஆய்வு செய்த அமைச்சர் கட்டடத்தில் உள்ள அறைகளின் நுழைவுவாயில் நிலைகளில் கை வைத்து சரியில்லை என்றும் சுவரில் ஒட்டப்பட்ட டைல்ஸ் மேல்பகுதியில் சிமென்ட் பூச்சு சரியாக பூசவில்லை என்று கூறி அதிகாரிகளை கடிந்தார்.கட்டடத்தின் வெளியே வந்த அமைச்சர் கட்டடத்தின் முகப்பு பகுதியை பார்த்து பெயின்ட் கலர் யார் தேர்வு செய்தது. மற்ற அரசு மருத்துவமனையில் எவ்வாறு உள்ளது. இது என்ன கலர் என்று கடிந்து கொண்டார். அதிகாரிகளிடம் பெயின்ட் கலரை மாற்றவும், அது குறித்து தன்னிடம் தெரிவிக்குமாறு கூறி சென்றார். ஆய்வில் கல்லுாரி முதல்வர் சத்தியபாமா, மருத்துவகண்காணிப்பாளர் கண்ணன், நிலைய மருத்துவர் மகேந்திரன், துணை நிலைய மருத்துவர் முகமதுரபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.