தக்காளி விலை உயர்வு சகஜம் தான் சொல்கிறார் அமைச்சர் பெரியகருப்பன்
சிவகங்கை: தமிழகத்தில் பருவ காலங்களில் ஓரிரு மாதங்கள் தக்காளி விலை உயர்வு ஏற்படுவது சகஜம் தான்,'' என சிவகங்கையில் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.ராணி வேலுநாச்சியார் நினைவு மண்டப வளாகத்திலுள்ள சுதந்திர போராட்ட வீராங்கனை குயிலியின் 244வது நினைவு தினத்தை முன்னிட்டு சிலைக்கு அமைச்சர்கள் பெரியகருப்பன், மதிவேந்தன், எம்.எல்.ஏ., தமிழரசி உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.பின் அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது: கடந்தாண்டு இதுபோன்று தக்காளி விலையேற்றம் அடைந்த போது கூட்டுறவு சங்கங்களின் மூலம் பசுமை பண்ணை கடைகளிலும் நியாய விலைக் கடைகளிலும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது. அதன் மூலம் விலையேற்றம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதுபோன்ற நடவடிக்கை இப்போதும் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது சென்னையில் விலை உயர்வு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த தனி ஆணையம் உள்ளது. அவர்கள் தேர்தலை நடத்த அறிவித்தவுடன் நடத்த தயாராக உள்ளோம் என்றார்.அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது: ஆதிதிராவிடர் நலத்துறை சமூகம் சார்ந்த பெயராக உள்ளதான விமர்சனம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பரிசீலனை செய்வார். இத்துறை அனைத்து பட்டியலின, பழங்குடி இன மக்களுக்கும் சிறப்பாக சேவை ஆற்றி வருகிறது. முதல்வர் ஆதி திராவிட மக்களுக்காக சிறப்பு நிதி ஒதுக்கி அவர்களின் குடியிருப்புகள், விடுதிகள், சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றை சீரமைத்து வருகிறார் என்றார்.