நான்கு வழிச்சாலை பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்
திருப்புவனம்: மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலான நான்கு வழிச்சாலையில் பல இடங்களில் சாலையோரம் பள்ளங்கள் இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி வழியாக பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு திருப்பாச்சேத்தியில் சாலையை பயன்படுத்தும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலையாக இருந்த பாதையை நான்கு வழிச்சாலையாக மாற்றினர். பல இடங்களில் வயல், தென்னந்தோப்புகளை அழித்து புதிய பாதை அமைக்கப்பட்டது. சாலையை தொடர்ச்சியாக பராமரிக்காததால் பல இடங்களில் சாலையோரம் அரிப்பு ஏற்பட்டு பள்ளங்கள் உருவாகி உள்ளன. இதை கண்டு கொள்ளாததால் பள்ளங்களின் ஆழம் அதிகரித்த வண்ணம் உள்ளது. சாலைகளில் வாகனங்கள் செல்லும் போது விலக முற்பட்டால் பள்ளத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் காயமடையும் அபாயம் உள்ளது. திருப்புவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மதுரைக்கு அதிகம் பேர் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். பெரும்பாலானவர்கள் டூவீலரை நம்பியே மதுரை சென்று வருகின்றனர். இரவு ஒன்பது மணிக்கு மேல் ஊர் திரும்புகின்றனர். சாலையோரம் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி காயமடைவதுடன் வாகனங்களும் சேதமடைகின்றன. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலையோர பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.