ம.பி., சி.பி.ஐ., அதிகாரி போல் பேசி வக்கீலிடம் ரூ.13 லட்சம் மோசடி
சிவகங்கை: மத்திய பிரதேச சி.பி.ஐ., அதிகாரி போல் 'வீடியோ காலில்' பேசி சிவகங்கை வழக்கறிஞர் ஸ்ரீதரனிடம் ஆன்லைன் மூலம் ரூ.13 லட்சம் மோசடி செய்தவர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.சிவகங்கை செந்தமிழ்நகர் வழக்கறிஞர் ஸ்ரீதரன் 53. இவரது அலைபேசிக்கு நவ.,14 அடையாளம் தெரியாதவரிடமிருந்து கால் வந்தது. அதில் பேசியவர் தன்னை மத்திய பிரதேச மாநில சி.பி.ஐ., அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டார். பின் 'வீடியோ கான்பிரன்சிங்' ல் வழக்கறிஞர் ஸ்ரீதரனிடம் பேசுகையில், ''நீங்கள் ஆதார், பான்கார்டு ஆகியவற்றை பயன்படுத்தி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால், கைது செய்யவுள்ளோம்,'' என மிரட்டியுள்ளார். கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க தான் குறிப்பிடும் வங்கி கணக்கிற்கு ரூ.13 லட்சம் அனுப்புமாறு கூறவே வழக்கறிஞர் பணத்தை அனுப்பினார். ஆனால் அந்த நபர் மேலும் பணம் அனுப்பும்படி கேட்கவே சந்தேகமடைந்த ஸ்ரீதரன் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், எஸ்.ஐ., முருகானந்தம் மற்றும் போலீசார் அந்த நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.