கூட்டுறவு நிறுவனத்திற்கு ரூ.58 லட்சம் நிதி இழப்பு ரூ.21 லட்சம் மட்டுமே வசூலிக்க நோட்டீஸ்
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட மொத்த விற்பனை பண்டக சாலைக்கு நிதியிழப்பு ரூ.58 லட்சம் ஏற்படுத்தியவர்களிடம் ரூ.21 லட்சம் மட்டுமே கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளதால், கூட்டுறவு ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்ட மொத்த விற்பனை பண்டக சாலை (பாம்கோ) நிர்வாகத்தின் கீழ் 140 ரேஷன் கடைகள், மருந்தகம், காய்கறி விற்பனை நிலையம், சுயசேவை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா காலத்தில் ரேஷனுக்கு மளிகை பொருட்கள் பாம்கோ நிர்வாகம் மூலம் வழங்கப்பட்டது. இதில், பல லட்ச ரூபாய் நிதியிழப்பு ஏற்பட்டுள்ளதாக அப்போதைய இணை பதிவாளர் ஜினுவிற்கு புகார் சென்றது. இது குறித்து விசாரிக்க முன்னாள் (ஓய்வு) துணை பதிவாளர் பாலசந்தர் தலைமையில் குழு அமைத்து விசாரித்தனர். இந்த விசாரணைக்கு இடையூறு ஏற்படும் என்பதற்காக கடந்த ஆண்டு ஏப்., பாம்கோ தலைவரை தகுதி நீக்கம் செய்து, முன்னாள் இணை பதிவாளர் ஜினு உத்தரவிட்டார். குழு விசாரணைக்கு பின், ரூ.21 லட்சம் வரை நிதியிழப்பு ஏற்படுத்தியதாக அப்போதைய பாம்கோ தலைவர், துணை பதிவாளர், கூட்டுறவு அதிகாரிகள் 4 பேரும் பணத்தை திரும்ப செலுத்துமாறு கூட்டுறவு இணைபதிவாளர் ராஜேந்திர பிரசாத் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பாம்கோ நிர்வாகத்திற்கு கொரோனா காலத்தில் ரூ.58 லட்சம் வரை நிதியிழப்பு ஏற்படுத்திய நிலையில், ரூ.21 லட்சத்தை மட்டுமே செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியது, கூட்டுறவு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கூட்டுறவு துணை பதிவாளர் (சரகம்) ஜெய்சங்கர் கூறியதாவது:இது குறித்த ஆவணம் என்னிடம் வரவில்லை. முன்பிருந்த அதிகாரிகளேநோட்டீஸ் அனுப்பியிருக்கலாம், என்றார்.