மாவட்டத்தில் சட்டசபை தொகுதிகளில் ஓட்டுச்சாவடி எண்ணிக்கை அதிகரிப்பு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டசபை தொகுதிகளில் வரும் தேர்தலில் ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை 1545 வரை அதிகரிக்க உள்ளது.2026 சட்டசபை தேர்தலுக்காக வாக்காளர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பணிகள் குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசனை வழங்கி வருகிறது.சிவகங்கை மாவட் டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகளின் கீழ் 1364 ஓட்டுச்சாவடிகளில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். வரும் 2026 சட்டசபை தேர்தல் பணி முதற்கட்டமாக ஒரு ஓட்டுச்சாவடியில் 1200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருந்தால், அந்த ஓட்டுச் சாவடிகளை கண்டிப்பாக இரண்டாக பிரிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.மாவட்ட அளவில் உள்ள 1364 ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்ததில் 1200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வரும் தேர்தலில் ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கையை இன்னும் 180 வரை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.வாக்காளர்களின் அடிப்படையில் ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கையை பிரித்த பின், வரும் 2026 சட்டசபை தேர்தலில் 4 சட்டசபை தொகுதியில் ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை 1545 க்கும் மேல் இருக்கும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.அதிகாரி கூறியதாவது, நேற்று தேர்தல் கமிஷனர் வீடியோ கான்பிரன்சிங் முறையில் ஆலோசனை வழங்கினார். அதில், கண்டிப்பாக 1200 ஓட்டுக்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடியை பிரிக்க உத்தரவிட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் ஓட்டுச்சாவடிகளில் எண்ணிக்கை அதிகரிக்கும். இதற்கான பணிகளை கலெக்டர் தலைமையில் தேர்தல் பிரிவினர் செய்து வருகின்றனர், என்றார்.