உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஒரே ஒரு டாக்டருடன் புற நோயாளிகள் பிரிவு

ஒரே ஒரு டாக்டருடன் புற நோயாளிகள் பிரிவு

காரைக்குடி : காரைக்குடி பழைய அரசு மருத்துவமனை பெயரளவிற்கு செயல்படுவதால் நகர்ப்புற நல வாழ்வு மையமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். காரைக்குடி ரயில்வே பீடர் ரோட்டில் காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வந்தது. தினமும் 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று சென்றனர். 200க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடந்தது. இந்நிலையில் சூரக்குடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்டது. சூடாமணிபுரம் சுப்பிரமணியபுரம், கணேசபுரம், அரியக்குடி, இலுப்பக்குடி காளவாய் பொட்டல் மக்கள் பழைய அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனையை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து முறையாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றம் செய்யப்படவில்லை. பழைய மருத்துவ மனை கட்டடங்கள் பயனின்றி பாழாகி கிடப்பதோடு, ஒரு மருத்துவருடன் புறநோயாளிகள் பிரிவு மட்டும் செயல்பட்டு வருகிறது. ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா கூறுகையில்: அரசு மருத்துவமனையை இடமாற்றம் செய்வதை கண்டித்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். சுகாதாரத்துறை இணை இயக்குனர் மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை. புதிய மருத்துவமனைக்குச் செல்ல போதிய பஸ் வசதி இல்லை. ஆட்டோவில் செல்ல ரூ.300 வரை செலவாகும். எனவே பழைய மருத்துவமனையை நகர்ப்புற நல வாழ்வு மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ அதிகாரிகள் கூறுகையில்: நகர்ப்புற நல வாழ்வு மையமாக மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வருகிறது. சுகாதாரத் துறை மற்றும் சமூக நலத்துறை சார்பில் ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் நல வாழ்வு மையம் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
அக் 02, 2025 09:45

மீடியா .. உங்களுக்கு தெரியுமா காரைக்குடி ரயில்வே பெட்டர் சாலையில் அமைந்துள்ள தற்போதைய அரசு மருத்துவமனை ...காரைக்குடி வள்ளல் அழகப்ப செட்டியர் அவர்களால் கட்டப்பட்ட கட்டிடம் . முதலில் மய்ய மின்வேதியியல் ஆய்வகம் இங்கு திரு பண்டிட் ஜவாஹர்லால் நேரு அவர்களால் துவங்கப்பட்டது. காரைக்குடி அரசினர் பொறியியல் கல்லூரி இங்குதான் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அரசு கலை கல்லூரி இங்குதான் துவங்கப்பட்டது. அதன்பின்னர்தான் வள்ளல் செட்டியார் இந்த கட்டிடத்தை அரசிற்கு தன்மை கொடுத்தார். அரசு நிருவாகம் செய்யமுடியவில்லை என்றால் அழகப்ப த்ருஷ்டிற்கு திரும்ப கொடுத்துவிடலாம் அதைவிட்டுவிட்டு நலவாரியம் மக்கள் மன்றம் என எவரும் கூப்பாடு போடவேண்டாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை